| அலை மானுறும் ஆசையின், வந்தனவால்- நிலையா மன, வஞ்சனை, நேயம் இலா, விலை மாதர்கண் யாரும் விழுந்தெனவே. |
நிலையா மன(ம்) - யாரிடத்தும் உறுதியாக நில்லாத மனமும்; வஞ்சனை - வஞ்சிக்கும் பாங்கும்; நேயம் இலா - உண்மையான அன்பும் இல்லாத; விலைமாதர்கண் - கணிகையரிடத்தில்; யாரும் விழுந்தெனவே- காமமுற்றார் மனம் இழந்தாற் போல; கலைமான் முதல் ஆயின கண்ட எலாம் - கானகத்தில் உள்ள கலை மான் முதலாக அப்பொன் மானைப் பார்த்த விலங்குகள் யாவும்; அலை மானுறும் - கடல் போன்று;ஆசையின் வந்தன - பெருகிய ஆவலுடன் வந்து சூழ்ந்தன; ஆல் -அசை. விலைமகளிர் போலப் பொன்மான் அமைய, அம் மகளிரிடம் ஆசை கொண்டார் போலப் பிற விலங்குகள் வந்தன என்றார். உவமையணி. விலைமகளிர் யார் மீதும் அன்பு வையார் அது போல் பொன்மானுக்கும் பிற விலங்குகளின் மீது பற்றில்லை. விலை மகளிருக்குப் பொன் மீது மட்டும் பற்று உண்டு. மாயமானுக்கும் பொன்னாகிய சீதை மீது நாட்டம் உண்டு. 44 3281. | பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் நையா இடை நோவ நடந்தனளால்- வைதேவி, தன் வால் வளை மென் கை எனும் கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள். |
பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் - (இவள் இடை) பொய்யே ஆகும் என்று அயலாளர் கூறுவதற்கேற்ப; நையா - வருத்தம் கொண்டு விளங்கும்; இடை நோவ - இடை நோகும்படி; நடந்தனள் - நடப்பவளாய்; வைதேவி - சீதை; தன் வால்வளை மென்கை எனும் - ஒளி பொருந்திய வளையல் அணிந்த தன் மெல்லிய கரங்கள் என்னும்; கொய்யா மலரால் - பறிக்கப்படாத மலர்களால்; மலர் கொய் குறுவாள் - கானகத்தில் பூப்பறிக்க முற்பட்டாள். ஆல் - அசை. இடை பொய் எனல் கவிதை மரபு. இதனால் இடைக்கு வருத்தம் ஏற்பட்டதாகக் கற்பித்தார். விதேக அரசன் குலமகள் என்பதால் வைதேகி எனப்பட்டாள். இங்கு வைதேவி எனத் திரிந்து வந்தது. கையெனும் கொய்யா மலர்' - பறவாக் கொக்கு என மாமரம் அழைக்கப்பட்டாற்போல் கரங்களை |