இவ்வாறு கூறினார். கொய்யா மலர் மலர் கொய்தது எனக் கவிதையழகு மிளிர முரண் அணியுடன் கூறினார். மூன்றாம் வரியில் 'வய்தேவி' என ஓசை எழுதலால் எதுகை பிழையாதாயிற்று. 45 3282. | உண்டாகிய கேடு உடையார், துயில்வாய் எண் தானும் இயைந்து இயையா உருவம் கண்டார் எனலாம் வகை, கண்டனளால்- பண்டு ஆரும் உறா இடர்பாடுறுவாள். |
உண்டாகிய கேடு உடையார் - நிச்சயம் அழிவு நேரும் என்ற நிலையில் உள்ளார்; துயில்வாய் - உறக்கம் கொள்ளுகையில்; எண் தானும் இயைந்து இயையா உருவம் - எண்ணத்தில் ஒரு போதும் இசைந்திராத விசித்திர வடிவங்களை; கண்டார் எனலாம் வகை - கனவிற் கண்டார்கள் என்று கூறத்தக்க முறையில்; பண்டு ஆரும் உறா இடர் - எக்காலத்தும் முன்பு எவரும் படாத துயரம்; பாடு உறுவாள் - பட இருக்கின்றவளான சீதை; கண்டனள் - மாய மானைக் கண்டாள்; (ஆல் - அசை) துன்பம் வருமுன் கனவு போன்ற முன் சகுனங்கள் தோன்றினாற் போலச் சீதை முன் பொன்மான் விபரீதம் விளைவிக்கத் தோன்றியது.46 3283. | காணா இது, கைதவம் என்று உணராள்; பேணாத நலம் கொடு பேணினளால்- வாழ்நாள் அவ் இராவணன் மாளுதலால், வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால். |
அவ் இராவணன் வாழ்நாள் - அந்த இராவணனின் ஆயுட் காலம்; மாளுதலால் - முடிய இருப்பதனாலும்; வீழ் நாளில் - அவன் மரணமுறுகிற நாளில்; அறம் புவி மேவுதலால் - தருமம் பூமியில் செழிக்க இருப்பதனாலும்; (சீதை); காணா - பொன்மானைக் கண்டு; 'இது கைதவம்' என்று உணராள் - 'இது வஞ்சனை வேடம்' என்று உணராதவள் ஆனாள்; பேணாத - ஆதரித்தற்கு ஒவ்வாத; நலம் கொடு பேணினள் - அழகில் ஆர்வம் கொண்டு (மாயமானை) விரும்பி நின்றாள். (ஆல் - அசை) |