பக்கம் எண் :

496ஆரணிய காண்டம்

     சீதை மாயமானை விரும்பியதற்குக் காரணம் இராவணன் அழிவும்,
அறத்தின் புத்துயிர்ப்பும் ஒரு சேர நடைபெறும் காலம் நெருங்கியதால்
என்றார்.                                                  47

மானைக் கண்டு மயங்கிய சீதை இராமனை அடைதல்

3284.நெற்றிப் பிறையாள்
     முனம் நின்றிடலும்,
முற்றிப் பொழி
     காதலின் முந்துறுவாள்,
'பற்றித் தருக என்பென்'
     எனப் பதையா,
வெற்றிச் சிலை
     வீரனை மேவினளால்.

    நெற்றிப் பிறையாள் முனம் - இளம் பிறை போலும் நெற்றியை
உடைய சீதை முன்; நின்றிடலும் - (மாய மான் வந்து) நிற்கவும்; முற்றிப்
பொழி காதலின் -
(அவள்) நிறைந்த ஆசை ததும்பி நிற்க; 'பற்றித் தருக'
என்பென் -
'இம் மானைப் பிடித்துத் தரவேண்டும்' என்று இராமனைக்
கேட்பேன்; எனப் பதையா - என உணர்ச்சி மிக்கவளாய்; (சீதை);
வெற்றிச் சிலை வீரனை - வில்லால் வெற்றி கொள்ளும் வீரனாகிய
இராமனை; முந்துறுவாள்; மேவினள் - அடைந்தாள். (ஆல் - அசை)  48

3285.'ஆணிப் பொனின் ஆகியது;
     ஆய் கதிரால்
சேணில் சுடர்கின்றது; திண்
     செவி, கால்,
மாணிக்க மயத்து ஒரு
     மான் உளதால்;
காணத் தகும்' என்றனள்,
     கை தொழுவாள்.

    (இராமனிடம் சென்று சீதை); 'ஆணிப் பொனின் ஆகியது -
மாற்றுயர்ந்த பொன்னால் ஆனதும்; ஆய் கதிரால் சேணில் சுடர்கின்றது-
சிறந்த ஒளியினால் தொலைவிலும் பளபளக்கின்றதும்; திண்செவி கால் -
வலிய காதுகளும் கால்களும்; மாணிக்க மயத்து - சிவந்த
மாணிக்கங்களால் ஆகியதுமான; ஒரு மான் உளது - ஒரு மான் காட்சி
தருகின்றது; காணத் தகும் - அழகால் காண்பதற்கு இனிதானது; என்றனள்-
என்று கூறியவளாய்; கைதொழுவாள் - (அதனைப் பற்றி அளிக்க
வேண்டுமெனக் கருதி) கையால் வணங்கி நின்றாள்; ஆல் - அசை.