பக்கம் எண் :

498ஆரணிய காண்டம்

அவ்விடத்துத் தன் கருத்தை உரைக்கலானான். ஆல் - அசை.

     கேட்டதைக் கொடுப்பவன் என்பதால் வள்ளல் என்றார். உரிய
சமயத்தில் இலக்குவன் குறுக்கிட்டான்.                             51

3288.'காயம், கனகம்; மணி,
     கால், செவி, வால்;
பாயும் உருவோடு இது
     பண்பு அலவால்;
மாயம் எனல் அன்றி,
     மனக் கொளவே
ஏயும்? இறை மெய் அல'
     என்ற அளவே.

    'காயம் கனகம் - (அம்மானின்) உடல் பொன்னிறமாய் உள்ளது;
கால் செவி வால் மணி - காலும், காதும், வாலும் மாணிக்க மயமாய்
உள்ளன; பாயும் உருவோடு இது - வேகமாகப் பாய்ந்தோடும் வடிவோடு
கூடிய இம்மான்; பண்பு அல - இயற்கைப் பண்போடு கூடியதன்று; மாயம்
எனல் அன்றி -
இது ஒருவகை மாயை என்று கருதுதலே அல்லாமல்;
மனக் கொளவே ஏயும் - வேறு விதமாகக் கருதுதல் பொருந்துமோ?;
இறை - என் தலைவனே; மெய் அல - எவ்வகையிலும் இது
உண்மையானது அன்று; என்ற அளவே - என இலக்குவன் கூறும்
அளவில்....

     (அடுத்த செய்யுளில் பொருள் முடிவுறும்).                    52

இராமன் பதிலுரை

3289. நில்லா உலகின் நிலை, நேர்மையினால்
வல்லாரும் உணர்ந்திலர்; மன் உயிர்தாம்
பல் ஆயிரம்கோடி பரந்துளதால்;
இல்லாதன இல்லை-இளங்குமரா!

    இளங்குமரா - இளமையுடைய தம்பி!; நேர்மையினால் வல்லாரும் -
முறையான அறிவிலே திறமை சான்றவரும்; நில்லா உலகின் நிலை
உணர்ந்திலர் -
நிலையில்லா உலகின் தன்மை முற்றும் அறிந்ததில்லை;
மன் உயிர்தாம் - வாழும் நிலை பெற்ற உயிரினங்களோ எனில்; பல்
ஆயிரம் கோடி பரந்துளது -
எண்ணிலாக் கோடிகளாய் விரிந்து பரந்து
உள்ளன; இல்லாதன இல்லை - இவ்வுலகில் இல்லாதவை என்று (நம்
அறிவை மட்டும் வைத்து) எவற்றையும் விலக்கிக் கூற முடியாது' (என்றான்
இராமன்); ஆல் - அசை.