பக்கம் எண் :

504ஆரணிய காண்டம்

'வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார்
     வினையின் செய்த
கைதவ மான் என்று, அண்ணல்! காணுதி
     கடையின்' என்றான்.

    ஐய நுண் மருங்குல் நங்கை - 'உண்டோ, இல்லையோ' என
ஐயுறத்தக்க சிறிய இடையை உடைய சீதையாகிய நங்கை; அஃது
உரை செய்ய -
இவ்வாறு தன் ஆசையை வெளியிட்டுப் பேச; ஐயன்-
தலைவனாகிய இராமன்; செய்வென் என்று அமைய - இதோ
பிடித்துத் தருகிறேன் என்று முடிவு கூற; நோக்கத் தெளிவுடைத்
தம்பி -
சிந்தனையில் தெளிவுடைய தம்பி இலக்குவன்; செப்பும் -
தமையனிடம் கூறலானான்; 'அண்ணல்! - என் தலைவனே; வெய்ய
வல்லரக்கர் -
கொடுமையும் வன்மையும் உடைய அரக்கர்கள்;
வஞ்சம் விரும்பினார் - வஞ்சனை செய்ய விரும்பியவராய்;
வினையின் செய்த - தந்திரத்தால் இயற்றித் தந்த; கைதவ மான்
என்று -
மாயமான், என்று; கடையின் காணுதி - முடிவில் உணர்ந்து
கொள்வாய்; என்றான் - என்று (எச்சரித்துக்) கூறினான்.

     இலக்குவனின் விடாப்பிடியான அறிவுக் கூர்மையும் கடமை
உணர்வும்
இங்குப் புலனாகின்றன. ஐய நுண் இடை என்பதற்கு
மிகவும் சிறிய இடை எனவும் பொருள் கொள்ளலாம்; ஐய எனின்
நுட்பம் என்று பொருள்படும்.                                    62

3299.'மாயமேல், மடியும் அன்றே
     வாளியின்; மடிந்தபோது
காய் சினத்தவரைக் கொன்று கடன்
     கழித்தோமும் ஆதும்;
தூயதேல், பற்றிக் கோடும்; சொல்லிய
     இரண்டின் ஒன்று
தீயதே? உரைத்தி' என்றான்-தேவரை
     இடுக்கண் தீர்ப்பான்.

    'மாயவேல் - நீ கூறுவது போல் மாயமானாக இருக்குமாகில்;
வாளியின் மடியும் அன்றே - என் அம்புக்கு அது இரையாகும்
அல்லவா?; மடிந்த போது - அவ்வாறு மரணமுறும் போது; காய்
சினத்தவரைக் கொன்று -
கொடிய சினம் கொண்ட அரக்கரை
அழித்து; கடன் கழித்தோமும் ஆதும் - நம் கடமையை
ஆற்றினவர்களும் ஆவோம்; (அன்றி); தூயதேல் - உண்மையான
மானாக இருக்குமாகில்; பற்றிக் கோடும் - பிடித்துக் கொண்டு
வருவோம்; சொல்லிய இரண்டின் ஒன்று - இப்போது நான் கூறிய
இரண்டில் ஏதேனும் ஒன்றை; தீயதே - தீமை என்று கூற முடியுமா?;
உரைத்தி - சொல்லுவாயாக; என்றான் - என்று சொன்னான்;
தேவரை இடுக்கண் தீர்ப்பான் - வானவர் துன்பத்தையும் அழிக்க
வல்ல இராமன்.