| வாயிடை, மழலை இன்சொல் கிளியினின் குழறி, மாழ்கி, 'நாயக! நீயே பற்றி நல்கலைபோலும்' என்னா, சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள். |
ஆயிடை - இப்பேச்சுக்களின் இடைப்புகுந்து; அன்னம்அன்னாள் - பேடை அன்னம் போன்ற சீதை; மாழ்கி -வருத்தமுற்று; அமுது உகுத்தனைய - அமுதம் சிந்தினாற் போன்று;செய்ய வாயிடை மழலை இன்சொல் - சிவந்த வாயில் இனியமழலை போலும் சொற்களை; கிளியினின் குழறி - கிளி மொழிவதுபோல் கொஞ்சிக் கூறி; 'நாயக - என் நாதனே; நீயே பற்றி நல்கலைபோலும் - இம்மானை நீயே பிடித்துத் தரமாட்டாயா; என்னா -என்று (ஊடல் கொண்டு); சேயரிக் குவளை - சிவந்த வரிகளைஉடைய குவளை மலர் போன்ற கண்களில்; முத்தம் சிந்துபு -கண்ணீர் முத்துக்கள் சிந்த; சீறிப் போனாள் - கோபம் கொண்டு செல்லத் தொடங்கினாள். இலக்குவன் கருத்தைத் தன் ஊடற் கோலத்தால் இராமபிரானிடம் மறுத்துக் கூறுகின்றாள் சீதை. 67 இளையவனை நிறுத்திவிட்டு இராமன் மானைத் தொடர்தல் 3304. | போனவள் புலவி நோக்கி, புரவலன், 'பொலன் கொள் தாராய்! மான் இது நானே பற்றி, வல்லையின் வருவென், நன்றே; கான் இயல் மயில் அன்னாளைக் காத்தனை இருத்தி' என்னா, வேல் நகு சரமும், வில்லும் வாங்கினன் விரையலுற்றான். |
போனவள் புலவி நோக்கி - அவ்வாறு சென்ற சீதையின் ஊடலைப் பார்த்து; புரவலன் - அனைவரையும் காத்தல் வல்ல இராமன், (இலக்குவனிடம்); 'பொலன் கொள் தாராய் - பொன்மயமான மலர் மாலை புனைந்தவனே; மான் இது நானே பற்றி- இம் மானை நானே பிடித்துக் கொண்டு; வல்லையின் வருவென் நன்றே - விரைவில் நன்கு வந்து விடுவேன்; (அதுவரை); கான் இயல் மயில் அன்னாளை - கானகத்து மயில் போன்ற சீதையை; காத்தனை இருத்தி - நீ காவல் காத்து இருப்பாயாக; என்னா - என்று கூறி; வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் - வேல் போன்ற கூரிய அம்புகளையும் வில்லையும் எடுத்துக் கொண்டு; விரையல் உற்றான் - வேகமாகச் செல்லலானான். |