தகையவனாலும் சரபங்கரின் தவப் பெருமை கூறுதற்கரியது என அவர் பெருமை உணரப்பெறும். 15 | 2602. | 'எந்தாய்! உலகு யாவையும் எவ் உயிரும் தந்தான் உறையும் நெறி தந்தனனால்; நந்தாத பெருந்தவ! நாடு அது நீ வந்தாய் எனின், நின் எதிரே வருவான்; |
எந்தாய்! - எம் தந்தை போன்ற பெரியீர்!; உலகு யாவையும் எவ் உயிரும் தந்தான் உறையும் நெறிதந்தனன் - உலகங்கள் எல்லாவற்றையும் அவற்றில் வாழும் எல்லா உயிரினங்களையும் படைத்தவனாம் பிரமதேவன் வாழும் சத்தியலோகத்தில் வீற்றிருக்கும் பேற்றை உமக்கு அருளினான்,அது நந்தாத பெருந்தவ நாடு - அந்த உலகம் அழியாத பெருந் தவத்தால் அடையத்தக்கதாகும்;நீ வந்தாய் எனின் - நீர் அங்கு வருவீர் என்றால்; நின் எதிரே வருவான் - அப்பிரம தேவன் உம் எதிர் வந்து அழைத்துச் செல்வான்; ஆல் - அசை. நெறி - இடம், நந்தாத பெருந்தவ என்ற தொடரை சரபங்க முனிக்கே விளியாக்கிக் கெடாதபெருந் தவத்தை உடையோய் எனக் கூறலுமாம். எந்தாய் என்பது இடவழுவமைதி, வந்தாய் என்பது காலவழுவமைதி. 16 | 2603. | 'எல்லா உலகிற்கும் உயர்ந் தமை, யான் சொல்லாவகை, நீ உணர் தொன்மையையால்: நல்லாளுடனே நட, நீ' எனலும், 'அல்லேன்' என, வால் அறிவான் அறைவான்: |
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை - அச்சத்திய லோகம் மற்றெல்லா உலகங்களுக்கும் சிறந்தது என்பதை; யான் சொல்லாவகை - நான் கூறாதபடி; நீ உணர் தொன்மையை - நீர் முன்னமே அறியும் பழமையுடையவராவீர்;(ஆதலின் உமக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை) ; நல்லாள் உடனே நட நீ எனலும் - உம்மனைவியுடன் வந்தருள்வீர் நீர் என்று இந்திரன் கூறவும்; வால்அறிவான் அல்லேன் எனஅறைவான் - சிறந்த அறிஞனாகிய சரபங்கர் அதற்கு இசையேன் என்று சொல்வார்; ஆல் -அசை. |