பக்கம் எண் :

516ஆரணிய காண்டம்

9. இராவணன் சூழ்ச்சிப் படலம்

     இராமனின் அம்பால் பொய்மான் வேடம் கொண்டு வீழ்ந்த
மாரீசன் இராமனின் குரலில் கதறினான். அதனை அரக்கனின்
வஞ்சனை என உணராத சீதையின் அவசரச் செயலால் காப்பியத்தில்
பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இதனை விளக்குவது இப்படலம். மாரீசன்
குரலை இராமன் குரல் அல்லவென்று உணர்ந்த இலக்குவன், வாளா
விருந்தான். அவ்வுண்மையை உணராத சீதை இராமனுக்குப்
பெருந்தீங்கு நிகழ்ந்ததாக அஞ்சி அழுது இராமனைக் காத்தற்கு
உடனே செல்லாத இலக்குவன்மேற் குறை கூறினாள். அதற்கு மாறாக
இராமனின் ஆற்றலைக் கூறி இலக்குவன் சீதைக்கு உண்மை நிலையை
எடுத்துரைத்தும், அதைக் கேளாமல் அவனைப் பழித்துத் தீயில்
விழப்போக, அவளைத் தடுத்து இராமனிருந்த இடத்தைத் தேடிச்
சென்றான்.

     சீதை தனியே இருப்பதைக் கண்ட இராவணன் தவக்
கோலத்துடன் வந்தான். வந்தவனை உண்மைத் துறவி என்றே கருதி
வரவேற்று, இன்மொழி கூறினாள். இராவணன் இருந்தவுடன் மலை,
மரம், பறவை, விலங்கு ஆகியவை அஞ்சி ஒடுங்கின. இராவணன்
சீதையைப் பற்றி வினவ, அவள் தன் வரலாறு கூறி அரக்கர்களையும்
இராவணனையும் இழித்துரைத்தாள். அது கேட்டு வெகுண்ட
இராவணன் தன் வேடம் நீங்கி உண்மை உருவொடு நின்றான்.
பலவாறு தன் பெருமையையும் தன்னை அடைந்தால் சீதை பெறப்
போகும் நலனையும் விரித்துரைத்தான். அவள் கொண்ட சினத்தையும்
பொருட்படுத்தாது அவள் அடி வணங்கினான். அஞ்சிய சீதை,
இராமலக்குவரைக் கூவி அழைத்தாள். இராவணன் தன் முன்னைய
சாபத்தை எண்ணிச் சூழ்ச்சி செய்து நிலத்தோடு பெயர்த்துச் சீதையைத்
தன் தேர் மீது வைத்துச் செல்லலானான். பலவாறு சீதை அரற்றினாள்.
அதுகேட்டு இராவணன் ஏளனம் செய்து சிரித்தான். சீதை
இராவணனின் வஞ்சனையைக் கூறி இழித்துரைத்தாள். 'வெள்ளி
மலையை எடுத்த தோளால் மானுடருடன் போர் புரியின் பழி தரும்;
அதைவிட வஞ்சமே பெரும் பயன் தரும்' என்றான். அதுகேட்ட சீதை
அவன் வஞ்சித்த செயலைப் பழித்தாள்.

     இவ்வாறு, மாய மானைக் காட்டி முதலில் இராமனையும் பின்னர்
மாரீசனின் மாயக் குரலால் இலக்குவனையும் சூழ்ச்சியாகப் பிரித்துச்
சீதையை வஞ்சக வேடம் பூண்டு நிலத்தோடு பெயர்த்துத் தேரில்
ஏற்றிக் கவர்ந்த இராவணனின் சூழ்ச்சிச் செயலை இப்படலம் கூறும்
சில பதிப்புகளில் இப் படலம் சடாயு உயிர் நீத்த படலத்தில் முன்
பகுதியாக உள்ளது.

கலிவிருத்தம்

3319. சங்கு அடுத்த தனிக்கடல் மேனியாற்கு
அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம்;