பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 517

கொங்கு அடுத்த மலர்க்குழல் கொம்பனாட்கு
இங்கு அடுத்த தகைமை இயம்புவாம்.

    சங்கு அடுத்த தனிக்கடல் மேனியாற்கு - சங்குகள்
பொருந்திய ஒப்பில்லாத கடல் போன்ற நீல நிறமுள்ள
திருமேனியுடைய இராமனுக்கு; அங்கு அடுத்த நிலைமை
அறைந்தனம் -
பொன் மானைத் தொடர்ந்து போன இடத்தில்
நிகழ்ந்த தன்மையைச் சொன்னோம்; கொங்கு அடுத்த மலர்க்குழல்
கொம்பனாட்கு -
நறுமணம் பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலை
உடைய பூங்கொம்பு போன்ற சீதைக்கு; இங்கு அடுத்த தகைமை
இயம்புவாம் -
இப்பன்னக சாலையில் நிகழ்ந்த தன்மையைச்
சொல்லுவோம்.

     இராமன் மேனிக்குக் கடல் உருவகம் 'கருங்கடலைச்
செங்கனிவாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்' என வரும் (656).
மேலும் 'மையோ மரகதமோ மறிகடலோ' எனவும் காணலாம் (1926).
கொங்கு - தேனும் ஆம். தகைமை என்பதற்கு இராவணனால்
பற்றப்பட்டமை எனவும் கூறுவர்.

     மலர்க்குழல் கொம்பு - இல்பொருள் உவமை. இது காப்பியத்தின்
முன் நிகழ்ச்சியைக் கூறி இனிக் காப்பியத் தலைவிக்கு வரப் போவதை
உணர்த்தும் கவிக் கூற்றாம்.                                    1

சீதையின் துயர்நிலை

3320. எயிறு அலைத்து முழை
     திறந்து ஏங்கிய,
செயிர் தலைக்கொண்ட,
     சொல் செவி சேர்தலும்,
குயில் தலத்திடை உற்றது
     ஒர் கொள்கையாள்,
வயிறு அலைத்து
     விழுந்து மயங்கினாள்.

    எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய - பற்களைக்
கடித்துக் கொண்டு குகை போன்ற தன் வாயைத் திறந்து (மாரீசன்)
முழங்கிய; செயிர் தலைக் கொண்ட சொல் செவி சேர்தலும் -
துன்பத்தை மேற்கொண்ட வார்த்தை சீதையின் காதில் பட்டவுடன்;
குயில் தலத்திடை உற்றது ஒர் கொள்கையாள் - ஒரு குயில்
(மரத்திலிருந்து தவறி) நிலத்தில் விழுந்தது போன்ற துயர்
அடைந்தவளாய்; வயிறு அலைத்து விழுந்து மயங்கினாள் -
வயிற்றில் கையால் அடித்துக் கொண்டு தரையில் விழுந்து
மயக்கமடைந்தாள்.

     செயிர் - சினம், வஞ்சகம், துன்பம். செயிர் தலைக் கொண்ட
சொல் - இராமன் அம்பினால் பொன்மான் வடிவிலிருந்த மாரீசன்
வீழும் போது 'ஆ, சீதே! ஆ, இலக்குவா!' என இராமனின் குரலில்
கூறிய வஞ்சகம் நிறைந்த சொல் ஆம். துன்பம் எனப் பொருள்
கொண்டு இராமன் அம்பினால் சாகப்