பக்கம் எண் :

518ஆரணிய காண்டம்

போகும் துன்பத்தில் விளைந்த சொல் எனவுமாம். இராமன் குரல்
போன்ற குரலில் ஆபத்து வெளிப்படவே தரையிடை வீழ்ந்த குயில்
போல் சீதை பெருந்துயருற்றாள். இது இராமனிடமிருந்து சீதை
பிரிக்கப்படுதற்கு முன்னறி குறியாக அமைகிறது. துன்பமிகும் போது
பெண்கள் வயிற்றிலடித்துக் கொண்டழுவதை முன்னர்ச் சூர்ப்பணகைப்
படலத்தில் 'வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து' (2846) என
வந்தது காட்டும். முழை - உவம ஆகுபெயர்.                     2

3321.' "பிடித்து நல்கு, இவ் உழை"
     என, பேதையேன்
முடித்தனென், முதல் வாழ்வு'
     என, மொய் அழல்
கொடிப் படிந்தது என, நெடுங்
     கோள் அரா
இடிக்கு உடைந்தது என,
     புரண்டு ஏங்கினாள்.

    (சீதை)இவ்உழை பிடித்து நல்கு என - இந்த மானை நீயே
பிடித்து எனக்குக் கொடு எனச் சொல்லி; பேதையேன் முதல் வாழ்வு
முடித்தனென் என -
அறிவற்ற நான் கணவனொடு வாழும்
குலமகளின் தலைமையுற்ற வாழ்வை முடித்துக் கொண்டேன் என்று
கூறி; மொய் அழல் கொடிப் படிந்தது என - நெருங்கிய தீ, ஒரு
பூங்கொடியைப் பற்றி எரித்தது போலவும்; நெடுங்கோள் அரா
இடிக்கு உடைந்தது என -
நீண்ட வலிய பாம்பு, இடி ஓசை கேட்டுத்
தன் வலிமை கெட்டுக் கிடந்தது போலவும்; புரண்டு ஏங்கினாள் -
தரையில் புரண்டு வருந்தினாள்.

     பேதை - பேதைப் பருவப் பெண்ணையும் குறிக்கும். இங்குப்
பேதைமைப் பண்பால் சீதை தன்னையே குறித்துக் கொண்டாள். முதல்
வாழ்வு என்பதை வாழ்வு முதல் என மாற்றியும் பொருள் காண்பர்.
இடைதல் - வருந்துதல்.

     மாரீசனின் போலிக் குரலைக் கேட்ட சீதை, இராமனின்
உண்மைக் குரல் எனக் கருதித் தீப்பட்ட பூங்கொடி போலவும்
இடியுண்ட நாகம் போலவும் துன்புற்றாள். உவமை இவ்வாறு அடுக்கி
வந்து சீதையின் துன்பத்தைப் பெருக்கிக் காட்டும். உதயணன் மார்பில்
மூர்ச்சித்து விழுந்ததை 'இடியேறுண்ட நாகம் போல' எனப்
பெருங்கதை கூறும் (பெருங்.2.10.112). சீவக சிந்தாமணியில் 'அருமை
மாமணி நாக மழுங்கவோர் உருமுவீழ்ந்தென உட்கினர்' (242) என்ற
உவமை காண்க. அது போல் இங்கும் மாரீசன் சொல்
இடியாகப்பட்டது. சீதை புரண்டேங்குவது நாகம் இடிக்கு உடைதற்குப்
பொருந்தும். மொய்குழற் கொடி - அன்மொழித்தொகை.             3

3322.'குற்றம் வீந்த குணத்தின்
     எம் கோமகன்,
மற்று அவ் வாள் அரக்கன்
     புரி மாயையால்,