எவ்வளவு உண்டோ அவை அனைத்தும்; அவன் முனியின் பேருமால் - இராமன் சினந்தவுடன் நிலை கெடும் ஆதலால்; கார் எனக் கரிய அக்கமலக் கண்ணனை - மேகம் போன்று கருநிறம் கொண்ட அந்தத் தாமரை போலும் சிவந்த கண்ணுடையவனை; யார் எனக் கருதி இவ்இடரின் ஆழ்கின்றீர் - யார் என்று எண்ணி இத்துன்பக் கடலில் அழுந்துகின்றீர்? மண் முதல் தீ வரை ஐம்பூதங்களையும் குறித்துப் பின் அவற்றையும் அடக்கி ஆளும் திறலுடையவன் இராமன் என வலியுறுத்திக் கூறினான் இலக்குவன். 'கமலக் கண்ணனைக் கையினில் காட்டினாள்' எனக் கரன் வதைப் படலத்திலும் இராமன் குறிப்பிடப்படுகிறான் (2889). அயோத்தியா காண்ட மந்திரப் படலத்திலும் 'புண்டரீகக் கண் புரவலன்' எனக் குறிக்கப் பெறுவான் இராமன் (1363). இங்குச் சீதைக்கு இராமனின் அவதார இரகசியத்தைக் கூறினான் எனலும் ஆம். என என்று முதலடியில் வந்தவை எண்ணுப் பொருளன. மூன்றாமடியில் வந்த என என்பது உவம உருபு. நான்காமடியில் வந்த என என்பது செயவென் எச்சம். 7 3326. | 'இடைந்துபோய் நிசிசரற்கு, இராமன், எவ்வம் வந்து அடைந்த போது அழைக்குமே? அழைக்குமாம் எனின், மிடைந்த பேர் அண்டங்கள், மேல, கீழன, உடைந்துபோம்; அயன் முதல் உயிரும் வீயுமால். |
இராமன் நிசிசரற்கு இடைந்து போய் - இராமன் அரக்கனுக்கு வலி ஒடுங்கிப், பின் வாங்கி; எவ்வம் வந்து அடைந்த போது அழைக்குமே - துன்பம் வந்து சேர்ந்த சமயத்தில் (பிறரைத் துணைக்குக்) கூப்பிடுவானோ? (மாட்டான்); அழைக்குமாம் எனின் - கூப்பிட நேருமானால்; மிடைந்த பேரண்டங்கள் மேல கீழன உடைந்துபோம் - நெருங்கிய பெரிய அண்டங்களெல்லாம் மேல் கீழனவாய் அழிந்து போய்விடும்; அயன் முதல் உயிரும் வீயும் - பிரமன் முதலான உயிர்களும் அழியும், ஆல் - ஈற்றசை. இடைதல் - தோற்றுப்போதல் என்றுமாம். நிசிசரன் - இரவில் சஞ்சரிக்கும் அரக்கன். அண்டப் பெருவெளியில் பல்வேறு உலகங்கள் நெருங்கியிருப்பதை 'மிடைந்த' எனச் சுட்டினான். எவ்வம் - துன்பம். இராமன் எல்லா அண்டங்களிலுள்ள எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் கலந்துள்ளவன் என்பதை முதலில் கூறினான் இலக்குவன். அதனால் அவனுக்கு ஒரு தீங்கு நேரிடின் எல்லாம் அழிந்திருக்கும்; அவ்வாறு அழியாததால் இராமனுக்கு எந்தத் தீங்கும் வரவில்லை என்பதை உணர்த்தினானாம். 8 |