| 'நின்ற நின் நிலை, இது, நெறியிற்று அன்று' எனா, வன் தறுகண்ணினள், வயிர்த்துக் கூறுவாள்: |
என்று அவன் இயம்பலும் - என்று இலக்குவன் கூறலும்; எடுத்த சீற்றத்தள் - பொங்கிய கோபத்தவளும்; கொன்றன இன்னலள் - தன்னைக் கொன்றது போன்ற துன்பத்தை அடைந்தவளும்; கொதிக்கும் உள்ளத்தள் - கொதிக்கின்ற மனமுடையவளும் ஆன; வன்தறு கண்ணினள் - வலிய அஞ்சாமை உடைய சீதை; நின்றநின் நிலை இது நெறியிற்று அன்று எனா - (இலக்குவனை நோக்கி, 'இராமனுக்குற்ற தீங்கைக் கேட்டும் அவற்கு உதவச் செல்லாது) இங்கு நின்ற உன்னுடைய இந்த நிலை நீதிமுறைப்பட்டது அன்று' என்று; வயிர்த்துக் கூறுவாள் - பகை பாராட்டிச் சொன்னாள். கொன்றன - கொன்றது போன்ற, கொன்றன்ன இன்னா செயினும் (குறள். 109) என்று வருதலை ஒப்பிடலாம். சீதை, தன்னை இலக்குவன் கொன்றது போல வந்த துன்பத்தினள் என உரைப்பர். இந்நிலையைச், சீதை வாயிலாகவே சுந்தர காண்டக் காட்சிப் படலத்தில் 'இளவலை எண்ணலா வினையேன் சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் எனத் துறந்தானோ?' (5082) என்பதால் உணரலாம். 12 3331. | 'ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்; பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி, எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு' எனா, |
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவர் - ஒரு நாள் மட்டும் பழகின வராயினும் அன்புடையோர் தாம் பழகியவர்க்காகத் தம் உயிரையும் கொடுத்து உதவி புரிவர்; நீ பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும் வெருவலை நின்றனை - (மாறாக) நீயோ இராமன் அழிவடைந்தான் எனும் தன்மையைக் காதால் கேட்டும் அஞ்சாமல் நின்றாய்; வேறுஎன் - இனி எனக்கு வேறு வழி யாது?; இனியான் எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா - இனிமேல் நான் தீயில் விரைந்து விழுந்து சாவேன் இவ்விடத்தே என்று கூறி..., ஆல் - அசை. ஒரு நாள் பழகினும் உயிரை ஈயும் என்பதற்குக் குகன்இராமனுடன் வனம் செல்லத் துணிந்தமை சான்றாகும் (1993).பெருமகன் - ஆண்களில் சிறந்தோன். பகல் - நாள், 'ஒல்லைகொடாஅ தொழித்த பகலும் (நாலடி. 169) என வருதல் காண்க. 13 |