பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 529

எதிர் பார்த்திருந்த வளைந்த பற்களையுடைய இராவணன்; வஞ்சம்
முற்றுவான் -
தான் கருதிய வஞ்சகச் செயலைச் செய்து
முடிப்பதற்காக; வரிமுளைத்தண்டு ஒரு மூன்றும் - வரிந்து கட்டிய
மூங்கில் தண்டுகள் ஒரு மூன்றையும்; முப்பகைத்தளை அரிதவத்தவர்
வடிவம் தாங்கினான் -
காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்று
உட்பகையாம் கட்டுகளை அறுத்த தவ வடிவையும் ஏற்றுக்
கொண்டான்.

     இறவு - நீக்கம். வளை எயிறு - வளைந்த பல். அரக்கர்க்கு
இத்தகைய பற்கள் உண்டு. முளை வரித் தண்டு ஒரு மூன்று -
முக்கோல் அல்லது திரிதண்டம் எனப்படும். மனப்பகையாம் காமம்
வெகுளி மயக்கம் ஆகியவற்றை அடக்கியவர் என்பதை
இத்திரிதண்டம் குறிக்கும். 'துறவிகளை முக்கோற் பகவர்' என்பர்
முன்னையோர். நூலேகரகம் முக்கோல் மணையே ஆயுங்காலை
அந்தணர்க்குரிய (தொல். பொருள் மரபியல். 71) எனத்
தொல்காப்பியம் கூறும். 'கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோலசை நிலை' என்பது முல்லைப் பாட்டு (37 - 38). 'உரைசான்ற
முக்கோல்' எனக் கலித்தொகையில் காணலாம்.                     20

3339. ஊண் இலனாம் என
     உலர்ந்த மேனியன்;
சேண் நெறி வந்தது ஓர்
     வருத்தச் செய்கையன்;
பாணியின் அளந்து இசை
     படிக்கின்றான் என,
வீணையின் இசைபட
     வேதம் பாடுவான்.

ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் - உணவு இல்லாதவன்
எனக் கூறும்படி வற்றிக் காய்ந்த உடலை உடையவனாயும்; சேண்
நெறி வந்தது ஓர் வருத்தச் செய் கையன் -
நெடுந்தூரம் நடந்து
வந்தது போன்று பெருந்துன்பத்தை வெளிப்படுத்தும் செயலை
உடையவனாயும்; பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என -
தாளத்தால் வரையறுத்து இசைப் பாடலைப் பாடுபவன் போல;
வீணையின் இசைபட வேதம் பாடுவான் - வீணை இசை போலச்
சாம வேதப் பாடல் பாடுபவனாயும் ஆனான்.

     ஊண் - உணவு. பாணி - கை; இங்குக் கையில் உள்ள
தாளத்திற்கு ஆகுபெயராய் வந்தது. பாட்டு என்பாருமுளர். வேதம்
எனக் குறிப்பிடினும் நான்கு வேதங்களில் பாடலிற் சிறந்தது
சாமவேதம் ஆதலின் அதுவே கொள்ளப்பட்டது. வீணையின் இசைபட
என்பதற்கு வீணை இசை ஒப்பாகாமல் கீழ்ப்படும் வகையில் எனவும்
கொள்ளலாம். இராவணன் வேதத்தில் வல்லவன் என்பதை முன்னர்
வந்த 'சொல் ஆய் மறை வல்லோய்' (3246) என்ற தொடரால்
அறியலாம். பின்னரும் மந்திரத் தருமறை வைகு நாவினான்' (3359)
என வரும் தொடரிலும் காணலாம்.                             21