பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 531

யுடையவனாய்; நாமநூல் மார்பினன் - பெருமை பொருந்திய
பூணூலை அணிந்த மார்பை உடையவனாய் இராவணன்; தூமனத்து
அருந்ததி இருந்த சூழல் வாய் நணுகினான் -
மாசற்ற மனமுள்ள
அருந்ததி போன்ற சீதை இருந்த பன்ன சாலை இடத்தை
வந்தடைந்தான். அரோ - அசை.

     ஆமையின் இருக்கை - ஆமை மனை எனக் கூறி அதன்
ஓட்டால் அமைந்தது என்பர். நாமம் - பெருமை, 'நாமநீர் அயோத்தி'
(1307) எனப் பால காண்டத்தில் இப் பொருளில் வரும். சீதையின் தூய
கற்புக்கு அருந்ததியே உவமையாகப் பயன்பட்டுள்ளமை காப்பிய
மரபாகும். 'தீதிலா வட மீனின் திறம் இவள் திறமென்றும்'
கண்ணகியின் கற்பின் சிறப்பை இளங்கோவடிகள் கூறுவார்.
(சிலப்பதிகாரம் 1.27). 'அருந்ததி அகற்றிய ஆசில் கற்பினாய்' எனச்
சிந்தாமணியின் 327 ஆம் பாடலிலும் காணலாம்.

     அருந்ததி வசிட்ட முனிவரின் மனைவி. தன் கற்பின் சிறப்பால்
வட திசையில் விண்மீனாய் விளங்குகிறாள் என்பது புராண மரபு.

     கண்ணொடு - ஒடு உருபு கருவிப் பொருளில் வந்தது. அருந்ததி-
உவமை ஆகுபெயர்.                                        23

3342.தோம் அறு சாலையின்
     வாயில் துன்னினான்;
நா முதல் குழறிட
     நடுங்கும் சொல்லினான்;
'யாவர் இவ் இருக்கையுள்
     இருந்துளீர்?' என்றான்-
தேவரும் மருள்தரத்
     தெரிந்த மேனியான்.

    தேவரும் மருள் தரத் தெரிந்த மேனியான் - விண்ணவரும்
மயங்கிட மாறுபட்ட தவ வடிவுடைய அந்த இராவணன்; தோம் அறு
சாலையின் வாயில் துன்னினான் -
குற்றமற்ற அந்தப் பன்ன
சாலையின் வாயிலைச் சேர்ந்தான்; நாமுதல் குழறிட நடுங்கும்
சொல்லினான் -
நாவின் அடி தடுமாறிக் குழறும்
சொல்லையுடையவனாகி; யாவர் இவ் இருக்கையுள் இருந்துளீர்
என்றான் -
யார் இந்தப் பன்ன சாலையில் இருக்கின்றீர் எனக்
கேட்டான்.

     தோம் - குற்றம். சாலை - தழைக் குடிசை, நாக்குழற நடுங்கிய
நிலை முன்னரே அறியும் வகையில் 'காப்பு அரு நடுக்குறும் காலன்,
கையினன்' (3340) என வருணிக்கப் பெற்றுள்ளது.

     தேவரும் மருள் தர எனக் கூறியதால் இவன் வஞ்சனைகளை
அறிந்த தேவர்கள் கூட ’இம் முதியவன் தான் இராவணன்' என
அறியாத வகையில் வேடம் அமைந்திருந்தது என்க.                24