புரண்டெழும் ஆசைக் கடலிடைப் பட்டோனும் ஆகிய இராவணன்; பொற்பினுக்கு அணியிணை - அழகுக்கு அணிகலமாய் விளங்குபவளை; புகழின் சேக்கையை - புகழுக்கு இருப்பிடமானவளை; கற்பினுக்கு அரசியை - கற்பு எனும் பண்பிற்கு அரசி போன்ற சீதையை; கண்ணின் நோக்கினான் - தன் கண்களால் பார்த்தான். வெற்பு என்பதை மலை போன்ற யானை என ஆகு பெயராய்க் கொண்டு யானை சிந்தும் மதத்தின் மேல் ஏற்றிக் கூறுவோரும் உளர். யானை உடலின் சில உறுப்புகளில் மட்டும் மதம் பெருகுவதால் மலையில் பெருகும் சிலா சத்து எனும் தாதுப் பொருளாய்ப் பொருள் கொள்ளப் பெற்றது. காமம் கடல் போலப் பெருகுதலில் ஆசை வேலை என உருவகிக்கப் பெற்றது. இதனைக் 'காதல் தானும் கடலினும் பெரிதே (நற். 166) எனவும், காமக் கடும் புனல் (குறள். 1134) எனவும் வருதலால் அறியலாம். இங்கு பொற்பினுக்கு அணி என்று குறித்தது போன்று முன்னர் மிதிலைக் காட்சிப் படலத்தில் 'அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே' (513) என வந்துளது. பின்னர் அனுமனும் 'கண்டனென் கற்பினுக்கு அணியை' (6031) என இராமனிடம் கூறினான். இது வரை சீதையை உருவெளியாக மனத்தால் கண்டிருந்த இராவணன் ஊனக் கண்ணின் நோக்கினான் என்றார். 26 | 3345. | தூங்கல் இல் குயில் கெழு சொல்லின், உம்பரின் ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும், ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம்? வீங்கின, மெலிந்தன, வீரத் தோள்களே. |
தூங்கல் இல் குயில் கெழு சொல்லின் - சோர்விலா நிலையில் பாடும் குயிலின் இனிமை பொருந்திய சொற்களோடு; உம்பரின் ஓங்கிய அழகினாள் - தெய்வலோக மகளிரினும் சிறந்த அழகும் உடைய சீதை; உருவம் காண்டலும் ஏங்கினன் மனநிலை யாது என்று உன்னுவாம் - திருவுருவைப் பார்த்ததும் ஏக்கம் கொண்ட இராவணனின் மனத்தின் நிலையை எது என்று யாம் நினைப்போம்?; வீரத்தோள்கள் வீங்கின மெலிந்தன - வீரத்தில் சிறந்த புயங்கள் அவளைக் கண்ட மகிழ்ச்சியால் பூரித்துப் பின் அவளை அடைவதை எண்ணி ஏங்கி மெலிந்தன. ஏ - ஈற்றசை. தூங்கல் - தாழ்ந்து சோர்தல். சீதையின் சோர்வுக்குக் காரணம் மாரீசனின் மாயக் குரலால் இராமனுக்குத் தீங்கு நேர்ந்திருக்கும் என எண்ணிய சோர்வு. கெழு - பொருந்துதல்; மிகுதியுமாம். உவமை உருபாகக்கொண்டும் பொருளுரைப்பர். குரலின் இனிமையும் உடலின் அழகும்உணர்ந்த |