பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 535

ஆயிரம் இல்லை!' என்று,
     அல்லல் எய்தினான்.

    சேயிதழ்த் தாமரை சேக்கை தீர்ந்து - சிவந்த இதழ்களுடைய
தாமரை மலராம் இருக்கையை விட்டு; இவண் மேயவள் மணிநிற
மேனி காணுதற்கு -
இங்கு வந்துள்ள திருமகளாம் சீதையின்
இரத்தினம் போன்ற செந்நிறம் கொண்ட உடலைப் பார்ப்பதற்கு; இங்கு
இமைப்பு இல் நாட்டங்கள் இருபது ஏயுமே -
இவ்விடத்தில் கண்
சிமிட்டாமல் உள்ள இருபது கண்கள் போதுமோ? (போதா); ஆயிரம்
இல்லை என்று அல்லல் எய்தினான் -
இமைக்காத கண்கள்
ஆயிரம் இல்லையே எனத் துன்பமுற்றான்.

     சீதையைக் கண்டவுடன் இராவணனுக்குத் திருமகள் நினைவு
வருகிறது. இவ்வாறே சூர்ப்பணகையும் சீதையைக் கண்டபோது
'அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோயத் திரு இங்கு
வருவாள் கொல்லோ?' (2790) என ஐயுறுகிறாள். இராவணனுக்கு அந்த
ஐயமுமில்லை. ஆயிரம் கண் வேண்டும் என்ற ஆசை போன்றே
மிதிலை நகர மக்கள் 'நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம்
வேண்டும்; கொம்பினைக் காணும் தோறும் குரிசிற்கும் அன்னதே
ஆம்' (708) என உவகை மொழி உரைப்பர். இராவணன் உளத்தில்
தன் இருபது கண்கள் பற்றிக் கூறினும் சீதைக்கு அவன் கண்கள்
அனைத்தும் தெரியா மாய வடிவே தெரிந்தது எனலாம்.

     'இங்கு' என்பது தன்மை இடத்தைச் சுட்டி வந்தது.நச்சினார்க்கினியர்
சிந்தாமணிப் பாடலுக்கு (72) உரைத்த உரையாலும்மணிமேகலையில்
'யாவை யீங் களிப்பன தேவர் கோன்' என்றஆபுத்திரன் மொழியாலும்
(மணிமேகலை 14.48) இப்பொருளைஉணரலாம்.                    29

3348.'அரை கடை இட்ட
     முக்கோடி ஆயுவும்
புரை தபு தவத்தின் யான்
     படைத்த போதுமே,
நிரை வளை முன் கை இந்
     நின்ற நங்கையின்
கரை அறு நல் நலக் கடற்கு?'
     என்று உன்னினான்.

    நிரை வளை முன்கை - வரிசையாக வளையல்கள் அணிந்த
முன் கையுடன்; இந்நின்ற நங்கையின் - இங்கு நின்ற பெண்களிற்
சிறந்தவளின்; கரை அறு நல்நலக் கடற்கு - எல்லை அற்ற சிறந்த
அழகான கடலில் படிந்து களிப்பதற்கு; புரைதபு தவத்தின் யான்
படைத்த -
குறையற்ற தவத்தினால் நான் அடைந்த; அரை கடை
இட்ட முக்கோடி ஆயுவும் -
அரைக் கோடியைப் பின் சேர்ந்த என்
மூன்று கோடி ஆயுட் காலமும் (மூன்றரைக் கோடி ஆண்டுக் காலம்);
போதுமே - போதுமானது ஆகுமோ (ஆகாது); என்று உன்னினான்-
என்று இராவணன் எண்ணலானான்.