(அடுத்த இராவணன்) இந்திரற்கு இந்திரன் - தேவர் தலைவனாம் இந்திரனுக்கே தலைவன்; எழுதல் ஆகலாச் சுந்தரன் - ஓவியத்தில் தீட்டற்கு அரிய அழகுடையவன்; நான்முகன் மரபில் தோன்றினான் - பிரமனின் குல வழியில் பிறந்தவன்; அந்தரத் தோடும் எவ் உலகும் ஆள்கின்றான் - வானில் உள்ள உலகத்தோடு எல்லா உலகங்களையும் ஆள்கின்றவன்; மந்திரத்து அருமறை வைகும் நாவினான் - மந்திரங்களைத் தம் இடமாகக் கொண்ட அரிய வேதங்கள் தங்கியுள்ள நாவை உடையவன்..... இந்திரன் - தலைவன். நரேந்திரன் என வருதல் காண்க. நான்முகன் மரபினன் என்பதை முன்னர்ச் சூர்ப்பணகையும் இராமனிடத்து 'பூவிலோன் புதல்வன் மைந்தன்' (2770) எனக் கூறினாள். 'அருமறை வைகும் நாவினன்' என்பதற்கேற்ப இராவணன் தவக் கோலத்துடன் வந்ததைக் கூறும் போது' வீணையின் இசைபட வேதம் பாடுவான். எனப்பட்டது (3339). சீதையின் கேள்விக்கு விடையாக இராவணன் பெருமை இது முதல் கூறப்பெறுகிறது. 41 | 3360. | 'ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை ஊசி-வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான்; ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் பூசல் செய் மருப்பினைப் பொடிசெய் தோளினான். |
ஈசன் இருந்த பேர் இலங்கு மால் வரை - சிவபிரான் எழுந்தருளியுள்ள பெரிதாக விளங்கும் மிகப் பெரிய கயிலை மலையை; ஆண்டு ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் - அக்காலத்தில் ஆணிவேருடன் அடியோடு பறித்து எடுக்கின்ற வலிமையுடையவன்; ஆசைகள் சுமந்த பேர் அளவில் யானைகள் - திசைகளைத் தாங்கும் பெருமையில் அளவில்லாத யானைகளின்; பூசல் செய் மருப்பினைப் பொடி செய் தோளினான் - போர் புரியும் கொம்புகளைப் பொடி செய்யும் வலிய தோள்களை உடையவன். ஊசிவேர் என்பதை நம்மாழ்வாரின் 'நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து இறை சேர்மின்' என்ற அடிகளால் (திருவாய் மொழி 1.2.3) காண்க. இராவணன் கயிலை மலையெடுத்தமை இக்காப்பியத்தில் பல இடங்களில் வரும். 'மலையெடுத்த தனிமலையே' எனச் சூர்ப்பணகையின் ஓல மொழிகளில் (2832) அறியலாம். 'உருட்டும் ஊற்றத்தான்' என்ற பாடமுளது அது மிகைபட மொழிந்ததாம். திக்கு யானைகளின் கொம்பொடித்த செய்தியும் இந்நூலில் பல இடங்களில் கூறப்பெறும். 'திக்கின் மாவெலாம் தொலைத்து வெள்ளி மலை எடுத்து' என்ற சூர்ப்பணகை கூற்றில் (2770) அறியலாம். இதனால் இராவணன் பேராற்றல் விளங்கும். 42 |