பக்கம் எண் :

544ஆரணிய காண்டம்

3361.'நிற்பவர், கடைத்தலை
     நிறைந்து தேவரே;
சொல் பகும், மற்று, அவன்
     பெருமை சொல்லுங்கால்;
கற்பகம் முதலிய
     நிதியம் கையன;
பொற்பு அகம், மான நீர்
     இலங்கைப் பொன் நகர்.

    கடைத்தலை நிறைந்து நிற்பவர் தேவரே - அவன் வாயிலில்
திரண்டு அவன் அருள் வேண்டி நிற்பவர்கள் தேவர்களே ஆவர்;
கற்பகம் முதலிய நிதியம் கையன - கற்பகத் தரு முதலிய
தேவலோகச் செல்வங்களெல்லாம் அவன் கையகத்துள்ளன; மான நீர்
இலங்கைப் பொன் நகர் பொற்பு அகம் -
பெருமை மிக்க கடல்
சூழ்ந்த இலங்கை எனும் அழகிய நகரம் அவனுடைய அழகிய
உறைவிடமாம். (எனவே); அவன் பெருமை சொல்லுங்கால்
சொல்பகும் -
அவனுடைய பெருமைகளைக் கூறும் போது சொற்கள்
ஆற்றலின்றி வலிமை குறையும்.

     தேவர்கள் அவன் அருள் நாடி அவன் வாயிலில் காத்திருத்தல்
இராவணனின் தலைமைப் பெருமையைக் காட்டும். கற்பகத் தரு,
சிந்தாமணி, காமதேனு போன்ற பல விண்ணவர் செல்வங்கள் அவன்
கையில் இருப்பது அவன் செல்வப் பெருமையைக் கூறும். 'ஆன நீர்'
எனவும் கொண்டு மிக்க நீர் எனவும் பொருள் கொள்வர்.             43

3362.'பொன்னகரத்தினும்,
     பொலன்கொள் நாகர்தம்
தொல் நகரத்தினும்,
     தொடர்ந்த மா நிலத்து
எந் நகரத்தினும், இனிய;
     ஈண்டு, அவன்
நல் நகரத்தன
     நவை இலாதன.

    பொன்னகரத்தினும் - பொன்மயமான தேவந்திரனின்
நகரமாகிய அமராவதியைவிடவும்; பொலன் கொள் நாகர்தம் தொல்
நகரத்தினும் -
பொலிவு மிக்க நாகர்களுடைய பழைய நகரமாகிய
போகவதியை விடவும்; தொடர்ந்த மாநிலத்து எந்நகரத்தினும்
இனிய -
(அவ்வுலகங்களால் மேலும் கீழுமாகத்) தொடரப்பட்ட
இப்பூவுலகிலுள்ள எந்த நகரத்தை விடவும், இனிமையுடையது; ஈண்டு-
இவ்வுலகில்; அவன் நல் நகரத்தன நவை இலாதன -அவனுடைய நல்ல
இலங்கை நகரத்தில் உள்ளவை எவ்விதக் குற்றமும்இல்லாதன.