யார் எனக் கருதிச் சொன்னாய் என்றான் - (அவனை) யார் என்று எளிமைப் படக் கூறினாய் என்று கேட்டான் இராவணன். நிலம், நீர், நெருப்பு, வான் ஆகியவற்றைக் கூறியதால் காற்றும் இதனுள் உபலட்சணத்தால் அடங்கும். பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவன் தன் மனத்தை அடக்கிக் காமத்தை ஆள வலிமையற்றிருக்கும் இராவணன் நிலையை உய்த்துணர வைக்கிறது இம்மொழிகள் 'மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே வான் வீழ்க்குவனே வளி மாற்றுவனெனத் தான் முன்னிய துறைபோகலின் என வேந்தன் உள்ளியது முடிக்கும் சிறப்பைப் பட்டினப்பாலை காட்டும் (பட்டின. 27 - 273). சில சொல், பலவினை என்பவற்றில் முரண்தொடை உளது. சீதை இராவணன் பண்பிற்காணும் முரண்பாடுகளுள் இதுவும் ஒன்றாம். 60 | 3379. | 'அரண் தரு திரள் தோள்சால உள எனின், ஆற்றல் உண்டோ? கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறைவைத்த கழற்கால் வீரன் திரண்ட தோள் வனத்தை எல்லாம், சிறியது ஓர் பருவம் தன்னில், இரண்டு தோள் ஒருவன் அன்றோ, மழுவினால் எறிந்தான்?' என்றாள். |
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ - காவலைச் செய்யும் திரண்ட தோள்கள் மிகுதியாக உள்ளன என்றால் அவற்றிற்கு வலிமை மிகுதி உள்ளதா?; கரண்ட நீர் இலங்கை வேந்தைச் சிறை வைத்த கழற்கால் வீரன் - நீர்க் காகங்கள் வாழும் கடல் சூழ்ந்த இலங்கை அரசனாம் இராவணனைச் சிறையில் அடைத்த வீரக்கழல் பூட்டிய கார்த்த வீரியார்ச்சுனனின்; திரண்ட தோள் வனத்தை எல்லாம் - பருத்த ஆயிரம் தோள்களாம் காட்டையெல்லாம்; சிறியது ஓர் பருவம் தன்னில் - தனது இளம் பருவத்தில்; இரண்டு தோள் ஒருவன் மழுவினால் எறிந்தான் அன்றோ என்றாள் - இரு தோள்களை உடைய பரசுராமன் தன் கைக் கோடரியால் வெட்டி எறிந்தான் அல்லவா எனச் சீதை கேட்டாள். தோள்கள் இருபதாயினும் ஆயிரம் தோளுடைய கார்த்த வீரியார்ச்சுனனால் சிறை வைக்கப்பட்டான் இராவணன். எனவே, அவன் வலிமை பயனற்றது என்பது விளங்கும். மேலும், அவ்வாயிரந்தோளுடையவனோ இரு தோளுடைய பரசுராமன் மழுவினால் வெல்லப்பட்டான். பரசுராமனோ இராமனுக்குத் தோற்றான். இதனால் இராவணனை இராமன் வெல்வது உறுதி என்பதைச் சீதை கூறாமல் கூறினாள். அரண்தரு தோள் - உடலைக் காப்பன தோளாம். 'மெய் சென்று தாக்கும் வியன் கோல் அடி தன் மேற் கை சென்று தாங்கும்' (நன்னெறி 3) என்பது காட்டும், காட்டைக் கோடரி வெட்டுவது போல் ஆயிரம் தோளாம் காட்டைப் பரசுராமனின் கோடரி வெட்டியது என்பது உருவக அணி. 'உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் வயிரப் பணை |