ஒழுக்கத்தை எண்ணிப் பாராதவனாய்; பொங்கு எரி(ப்) புனிதர் ஈயும் அவியை நாய் வேட்ட தென்ன - வளர்ந்தெரியும் வேள்வித் தீயில் தூய முனிவர் (தேவர்க்காக) இடும் அவிர்ப்பாகத்தை நாய் விரும்பினாற் போல; என் சொனாய் அரக்க என்னா - என்ன வார்த்தை சொன்னாய் அரக்கனே என்று சொல்லி. இராவணன் கூறிய சொற்கள் கேட்கத் தக்கன அல்ல ஆதலால் தன் செவிகளைக் கைகளால் மூடிக் கொண்டாள். சிக்கு - கெட்டி உறுதி எனலுமாம். சீதை தன்னை யாரென்று இராவணனிடம் கூறும் போதும் 'காகுத்தன் மனைவி' என்றது (3357) போல இங்கும் அப்பெயரே சுட்டினாள். தேவர்க்குரிய அவி உணவு போல உயர்ந்த கற்புடை நிலையில் சீதை இருப்பதையும் நாய் போல் இழிந்த நிலையில் இராவணன் இருப்பதையும் உவமையால் அறியலாம். 'அவியை நாய் வேட்டதென்ன' என்று உவமை சொன்னவள், அதற்குரிய உவமேயத்தை விரித்துரைக்கவில்லை. கற்புடைத் தேவி அதனைச் சொல்லக் கூசினாள். அதனை விரிக்காமல், 'என் சொன்னாய், அரக்க' என்று வினவி முடித்தாள் - நயத்தக்க நாகரிகம் உணர்க. அடியவரைக் காப்பதால் அழகும் பகைவரை அழிப்பதால் வெம்மையும் கொண்டதாக இராமன் வில் போற்றப் பெறுகிறது. இது வரை முனிவர் என இராவணனை மதித்த நிலை மாறி 'என் சொன்னாய், அரக்க!' என இழிவு படக் கேட்கிறாள் சீதை. கவினும் - எதிர்காலப் பெயரெச்சம். 67 3386. | 'புல் நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்து நின்ற என் உயிர் இழத்தல் அஞ்சி, இற்பிறப்பு அழிதல் உண்டோ? மின் உயிர்த்து உருமின் சீறும் வெங் கணை விரவாமுன்னம், உன் உயிர்க்கு உறுதி நோக்கி, ஒளித்தியால் ஓடி' என்றாள். |
புல்நுனை நீரின் நொய்தாப் போதலே புரிந்து நின்ற - புல்லின் நுனியில் தங்கிய நீர்த்துளி போன்று அற்பமாய் ஆவி ஆகிப் போவதையே தன் தொழிலாக விரும்பிச் செய்கின்ற; என் உயிர் இழத்தல் அஞ்சி இற்பிறப்பு அழிதல் உண்டோ - என்னுடைய உயிரை விட்டு விடுவதற்குப் பயந்து நற்குலத்தில் பிறந்த பெருமையை அழியும்படி செய்வதுண்டோ? (இல்லை); மின் உயிர்த்து உருமின் சீறும் வெங் கணை விரவா முன்னம் - மின்னலென ஒளிவிட்டு இடியெனச் சீறித் தாக்கும் கொடிய அம்பை (இராமன் விட, உன்னை வந்து) தைத்து உன்னைக் கொல்வதற்கு முன்னரே; உன் உயிர்க்கு உறுதி நோக்கி - உன்னுடைய உயிருக்குப் பாதுகாப்பைக் கருதி; ஓடி ஒளித்தி என்றாள் - இவ்விடம் விட்டு ஓடி மறைந்து கொள் எனக் (இராவணனை எச்சரிக்கை செய்து) கூறினாள் சீதை; ஆல் - அசை. |