பக்கம் எண் :

இராவணன் சூழ்ச்சிப் படலம் 567

3394.'செஞ் சேவகனார் நிலை நீர் தெரிவீர்;
மஞ்சே! பொழிலே! வன தேவதைகாள்!
"அஞ்சேல்" என நல்குதிரேல், அடியேன்
உஞ்சால்,அது தான் இழிவோ?' உரையீர்!

    மஞ்சே - மேகங்களே!; பொழிலே - சோலைகளே!;
வனதேவதைகாள் - காட்டில் உள்ள தெய்வங்களே!;
செஞ்சேவகனார் நிலை - நேர்மையுள்ள நல்ல வீரனாம் இராமனின்
(என்னை இழந்ததால் அடையும்) துன்பநிலை; நீர் தெரிவீர் - நீங்கள்
அறிவீர்கள்; அஞ்சேல் என நல்குதிரேல் - பயப்படாதே என்று
எனக்கு ஆறுதல் அளிப்பீராயின்; அடியேன் உஞ்சால் அது தான்
இழிவோ உரையீர் -
அடியவளாகிய நான் (பிழைப்பேன் அவ்வாறு)
பிழைத்தால் அது உங்களுக்குக் குறையாகுமா? சொல்லுங்கள்.

     மலைமேலும் வானத்திலும் மஞ்சு இருக்கும். பொழிலும்
வானுயர்ந்து நிற்கும். வனதேவதைகள் காட்டில் நடப்பனவற்றை
அறிவார்கள். எனவே, அவையும் இராமன் என்னை இழந்து வருந்தும்
நிலையை அறிந்திருக்கக் கூடும். அதனைத் தன்னிடம் கூறச் சீதை
வேண்டுகிறாள். சேவகன் - வீரன்; இராமனைச் சேவகன்
என்றழைத்தல் 'சேவகன் சீறா முன்னம் சேதுவும் இயன்ற மாதோ'
என்ற அடியில் காணலாம் (4759). நிலை - இருக்கும் இடம்
எனலுமாம்.

     உஞ்சால் - போலி (உய்ந்தால்).                            76

3395.'நிருதாதியர் வேர் அற, நீல் முகில்போல்
சர தாரைகள் வீசினிர், சார்கிலிரோ?
வரதா! இளையோய்! மறு ஏதும் இலாப்
பரதா! இளையோய்! பழி பூணுதிரோ!

    நிருதாதியர் வேர் அற - அரக்கர் முதலிய கொடியவர்
அடியோடு அழிய; நீல்முகில் போல் சர தாரைகள் வீசினிர்
சார்கிலிரோ -
நீல மேகம் போல் அம்பு மழை பொழிந்து இங்கு
வந்து சேரமாட்டீரா? வரதா - அடைக்கலமாக வந்தவர்க்கு அருளும்
இராமனே!; இளையோய் - இராமனின் தம்பியாம் இலக்குவனே!; மறு
ஏதும் இலாப் பரதா -
குற்றம் ஒன்றும் இல்லாத பரதனே!;
இளையோய் - பரதனை நீங்காத் தம்பியாம் சத்துருக்கனே!; பழி
பூணுதிரோ -
என்னை இந்த ஆபத்திலிருந்து காக்காமலிருந்து பழியை
அடைவீர்களோ?

     நிருதாதியர் - அரக்கர் தலைவனாம் இராவணன் முதலானோர்
எனவுமாம். இராமனை நீல முகிலுக்கு ஒப்பிட்டது நிறத்தாலும் அம்பு
சொரியும் ஆற்றலாலும் என்க. 'வரதன்' என்ற வழக்கு பாலகாண்டத்
திரு அவதாரப் படலத்தில் 'வரதனும் இளவலும் என மருவினரே' (307)
என வந்துளது. கடுஞ் சொல்கூறி வனத்தில் இராமனைத் தேட
இலக்குவனை விடுத்ததையும் மறந்து 'இளையோய்' என்கிறாள்.
கைகேயி வரத்தால் பெற்ற நாட்டை மீண்டும் இராமனுக்கே அளிக்கக்
காட்டிற்கு வந்து கூற இராமன்