கிளையோடும் கெட்டாய் - (உன்) சுற்றத்தவருடன் கெட்டுப் போனாய்; நின் வாழ்வை எலாம் சுட்டாய் - நினது வாழ்வு முழுவதையும் எரித்து அழித்துக் கொண்டாய்; நீ இது என்னை தொடங்கினை? - நீ (இத்தகு தகுதியில் செயலை) ஏன்? தொடங்கினாய்; பட்டாய் எனவே கொடு - (நீ) இறந்து பட்டாய் என்றே எண்ணிக் கொண்டு; பத்தினியை விட்டு ஏகுதி - இராமனது (கற்புக் கொழுந்தாம்) மனைவியை விட்டுச் செல்வாய்; விளிகின்றிலையால் - (அவ்வாறு செய்தால்) இறக்க மாட்டாய். உன் செயலால் உன் உறவினரும் நீயும் முழுதும் அழிந்துபடுவீர்கள். எனவே, கற்பின் கனலியை விட்டு உயிர் உய்ந்து போக என்றவாறு. சுட்டாய் - எதிர்காலம் இறந்த காலமாய் வந்த காலவழுவமைதி. எலாம் - இடைக்குறை. கொடு - இடைக்குறை, ஆல் இரண்டும் அசை. இப்பாடலில் சடாயு இராவணனின் அழிவையும் சுற்றத்தவர் அழிவையும் கூறி அச்சம் உண்டாக்கி அவன் செயலைத் தடுக்க முனைதலை உணர்க. 8 3411. | 'பேதாய்! பிழை செய்தனை; பேர் உலகின் மாதா அனையாளை மனக்கொடு, நீ யாது ஆக நினைத்தனை? எண்ணம் இலாய்? ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ? |
பேதாய் - அறிவற்றவனே; பிழை செய்தனை - நீ பெருந்தவறு செய்துவிட்டாய்; பேர் உலகின் மாதா அனையாளை - (இப்) பெரிய உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தாய் போல் தலையளி செய்யும் சீதையை; நீ யாது ஆக மனக்கொடு நினைத்தனை - நீ என்ன என்று மனத்தில் நினைத்துக் கொண்டாய்; எண்ணம் இலாய் - சிந்தனை இல்லாதவனே; இனி நினக்கு ஆதாரம் யார் உளரோ - இனி உனக்குப் பற்றுக் கோடாக யாவர் உளர், (ஒருவரும் இல்லை என்றபடி). நீ உன் பற்றுக் கோட்டைப் பறி கொடுத்து விட்டாய் என்றபடி. மூவுலகும் பூத்தானை நாபிக் கமலத்துப் பூத்த மாலின் மனைவியாம் திருமகளின் திருவவதாரம் ஆகலின் சீதையைப் பேர் உலகின் மாதா என்றார். திருமால் குற்றமுடையார் மாட்டுச் சினங்கொள்ளுங்கால் புருஷகாரமாக நின்று இன் சொல் கூறிச் சினம் தணிப்பிக்க வல்ல பிராட்டிக்கே அபராதம் எண்ணினை எனவே நினக்கு ஆதாரம் யாரும் இல்லை என்றபடி. ஆதாரம் - பற்றுக்கோடு. மனக்கொடு - மனம் + அத்து + கொடு என அத்துச் சாரியை தொக்க மனக்கொடு என்று ஆயிற்று. 9 |