3412. | 'உய்யாமல் மலைந்து, உமர் ஆர் உயிரை மெய்யாக இராமன் விருந்திடவே, கை ஆர முகந்து கொடு, அந்தகனார், ஐயா! புதிது உண்டது அறிந்திலையோ? |
ஐயா - ஐயனே; உமர் உய்யாமல் மலைந்து - உம் இனத்தவர் ஆகிய கர தூடணர் முதலியோர் தப்பிப் பிழைக்க முடியாதபடி போர் செய்து; இராமன் ஆர் உயிரை மெய்யாக விருந்திட - இராமன் (அவர்களது) அருமையான உயிரைத் (தனக்கு) உண்மையான விருந்தாகக் கொடுக்க; அந்தகனார் கை ஆரமுகந்துகொடு - யமனார் கை நிறைய வாரி எடுத்து; புதிது உண்டது அறிந்திலையோ- புதிதாக (விருந்து) உண்டதை (நீ) அறியவில்லையோ?; ஏ - அசை. இராமன் உன் இனத்தவரை ஒருவனாய் நின்று அழித்தமை கண்டும் ஏன் இச்செயல் செய்தாய் என்கிறான் சடாயு. புதிது உண்டது - பல நாள் அரக்கர் தலைவனாம் இராவணனுக்கு அஞ்சி அரக்கர் உயிரைக் கவராத யமன் இராமன் உதவியால் அவர்கள் உயிரைக் கவர்ந்தமை பற்றி இவ்வாறு கூறினார். உமர் - உம் இனத்தவர் ஆகிய கர தூடணர் முதலியோர். அந்தகனார் - எமன். 10 3413. | 'கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல் விடும் உண்டை கடாவ விரும்பினையே? அடும் என்பது உணர்ந்திலை ஆயினும், வன் கடு உண்டு, உயிரின் நிலை காணுதியால்! |
கொடு வெங்கரி கொல்லிய வந்ததன் மேல் - (உன்னைக்) கொல்வதற்காக வந்த கொடுமையான சினம் கொண்ட யானையின் மீது; விடும் உண்டை கடாவ விரும்பினையே - வீசும் (மண்) உருண்டையைச் செலுத்த விரும்பினாயோ?; அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் - கொல்லும் என்பதை அறிந்திலை என்றாலும்; வன்கடு உண்டு - கொடுமையான நஞ்சினை உண்டு; உயிரின் நிலை காணுதியால் - உயிர் ஆனது (உடலில்) நிலை பெற்று இருப்பதை (நீ) காண்பாயா? என்றபடி. உன் செயல் சினம் கொண்டு கொல்ல வரும் யானையின் மீது மண்ணுருண்டையை வீசுவது போலவும், வலிமையான கொல்லும் தன்மை உள்ள நஞ்சு கொல்லும் என்பதை உணராமல் அதை உண்டு உயிர் பிழைக்கலாம் என எண்ணுவது போலவும் உள்ளது. அடும் என வந்த யானையின் மீது உண்டை எறிந்தால் அதன் சினம் மிகுதல் போல அரக்கராம் பகை முடிக்க வந்த இராமனின் சினத்தை மிகுதிப்படுத்த நீ இச் செயல் செய்தனை போலும். மேலும் விடம் கொல்லும் என ஒருவன் அறியாது உண்டாலும் அது அவனைக் கொல்லுமாறு போலப் பிராட்டியாம் கற்புக் கனலியின் திட்டியின் விடம் அன்ன கற்பு உன்னை அழித்தே தீரும் என்பதாம். உண்டை - மண்ணுருண்டை. வன் கடு - கொடிய நஞ்சு, கொல்லிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினைஎச்சம். ஆல் - அசை. 11 |