பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 589

பொழிந்தான், புகர் வாளிகள்
     மீளவும்; 'போர்ச் சடாயு
விழுந்தான்' என, அஞ்சினர்,
     விண்ணவர் வெய்து உயிர்த்தார்.

    அரக்கன் ஆர்த்து - அரக்கன் ஆகிய இராவணன் பேரொலி
செய்து; எழுந்தான் தட மார்பினில் - தன் குண்டலங்களைப்
பறித்துக் கொண்டு எழுந்தவனாகிய (சடாயுவின்) பரந்த மார்பில்;
ஏழினொடு ஏழு வாளி எடுத்து - பதினான்கு அம்புகளை எடுத்து;
அழுந்தாது கழன்றிடப் பெய்து - (அவை) மார்பில் பதிந்து
நிற்காமல் ஊடுருவிப் போகும்படி எய்து; மீளவும் புகர் வாளிகள்
பொழிந்தான் -
மீண்டும் ஒளியுள்ள அம்புகளைச் (சடாயு) மேல்
எய்தான்; போர்ச் சடாயு விழுந்தான் என அஞ்சினர் - போர்
ஆற்றல் மிக்க சடாயு விழுந்து விட்டான் என அஞ்சி; விண்ணவர்
வெய்து உயிர்த்தார் -
தேவர்கள் பெருமூச்சு விட்டார்கள்.

     தன் குண்டலங்களைப் பறித்து எழுந்த சடாயுவின் மார்பில்
பதினான்கு அம்புகளை ஊடுருவிச் செல்லுமாறு எய்த இராவணன்,
மேலும் அம்புகளைச் சடாயு மீது சொரிந்ததைக் கண்டு சடாயு
விழுந்தான் என எண்ணித் தேவர்கள் பெருமூச்சு விட்டனர் என்க.
ஏழினொடு ஏழு - பதினான்கு; கழன்றிட - ஊடுருவ; புகர் - ஒளி.
தடமார்பு - உரிச்சொல் தொடர். ஏழினொடு ஏழு - உம்மைத் தொகை.
எழுந்தான் - வினையாலணையும் பெயர். விழுந்தான். தெளிவு பற்றி
வந்த கால வழுவமைதி. முந்தைய பாடலும் இதுவும் அந்தாதித்
தொடையில் அமைந்துள்ளமை காண்க.                        25

3428.புண்ணின் புது நீர் பொழியப் பொலி
     புள்ளின் வேந்தன்,
மண்ணில், கரனே முதலோர்
     உதிரத்தின் வாரிக்-
கண்ணில் கடல் என்று
     கவர்ந்தது கான்று, மீள
விண்ணில் பொலிகின்றது ஓர்
     வெண் நிற மேகம் ஒத்தான்.

    புண்ணின் - (தன் உடம்பில் அம்புகள் பட்டதால் ஏற்பட்ட)
புண்ணில் இருந்து; புதுநீர் பொழியப் பொலி - புதுக் குருதி
மிகுதியாக வடிந்தும் பொலிவு மாறாத; புள்ளின் வேந்தன் -
பறவைகளுக்கு அரசனாகிய சடாயு; மண்ணில் கரனே முதலோர்
உதிரத்தின் வாரி -
நிலத்தில் பெருகி ஓடிய கரன் முதலிய
அரக்கர்களது குருதி வெள்ளத்தை; கண்ணில் கடல் என்று கவர்ந்து-
பெருமை உடைய கடல் என்று கருதிப் பருகிய (வெண் மேகம்);
அது கான்று மீள - அந்நீரைப் பின்பு சொரிந்து; விண்ணில்
பொலிகின்றது -