பக்கம் எண் :

590ஆரணிய காண்டம்

வானத்தில் அழகு பெற விளங்குகிற; ஓர் வெண் நிற மேகம்
ஒத்தான் -
ஒப்பற்ற வெண்மை நிறம் உடைய மேகத்தை
ஒத்திருந்தான்.

     கடல் நீரை முகந்து வெண்மேகம் கருமேகமாகி மழை பெய்த
பிறகு மீண்டும் வெண் மேகம் ஆதல் இயல்பு. இறந்தவர்களின்
குருதியைப் பருகும் வாழ்க்கை உள்ள கழுகுகளுக்கு அரசனாகிய
சடாயு வெண்மை நிறம் உடையவன். கண் - பெருமை. காலுதல் -
வெளியிடுதல்.                                             26

3429. ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்;
     அவன் தோள்
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில்
     தத்தி, மூக்கால்
கொத்தா, நகத்தால் குடையா,
     சிறையால் புடையா,
முத்து ஆர மார்பில் கவசத்தையும்
     மூட்டு அறுத்தான்.

    ஒத்தான் - வெண் மேகத்தை ஒத்தவன் ஆகிய சடாயு; உடனே
உயிர்த்தான் உருத்தான் -
உடனடியாகப் பெருமூச்சு விட்டுச் சினந்து;
அவன் தோள் பத்தோடு பத்தின் நெடும்பத்தியில் - அந்த
(இராவணனது) தோள்கள் ஆகிய இருபதின் வரிசையில்; தத்தி -
பாய்ந்து ஏறி; மூக்கால் கொத்தா - மூக்கினால் கொத்தியும்; நகத்தால்
குடையா -
நகத்தால் பிறாண்டியும்; சிறையால் புடையா -
சிறகுகளால் அடித்தும்; முத்து ஆர மார்பில் - (அவனது) முத்து
மாலை அணிந்த மார்பில் விளங்கிய; கவசத்தையும் மூட்டு
அறுத்தான் -
கவசத்தையும் மூட்டுவாய் அறும்படி செய்தான்.

     அம்புபட்ட சடாயு, உயிர்த்து, உருத்து, இருபது தோள்களில் ஏறி,
கொத்திக் குடைந்து புடைத்து அவனது மார்பில் விளங்குகிறகவசத்தின்
மூட்டுவாய் அறும்படி செய்தான் என்க. ஒத்தான் - முன்பாடலில் கூறிய
படி வெண் மேகத்தை ஒத்தவன் என்றபடி. பத்தி -வரிசை, தத்தி - பாய்ந்து
ஏறி, மூட்டறுத்தல் - இணைப்பு வாய்நெகிழும் படி செய்தல். கொத்தா,
குடையா, புடையா - செய்யாஎன்னும் வாய்பாட்டு உடன்பாட்டு
வினையெச்சங்கள் முந்தையபாடலும் இதுவும் அந்தாதித் தொடையில்
அமைந்து உள்ளமைகாண்க.                                    27

3430. அறுத்தானை, அரக்கனும், ஐம்பதொடு
     ஐம்பது அம்பு
செறித்தான் தட மார்பில்; செறித்தலும்,
     தேவர் அஞ்சி
வெறித்தார்; வெறியாமுன், இராவணன்
     வில்லைப் பல்லால்
பறித்தான் பறவைக்கு இறை,
     விண்ணவர் பண்ணை ஆர்ப்ப.