அறுத்தானை - (தன்) கவசத்தை மூட்டு அறுத்த சடாயுவினுடைய; தட மார்பில் - பரந்த மார்பில்; அரக்கனும் ஐம்பதொடு ஐம்பது அம்பு செறித்தான் - அரக்கனாகிய இராவணனும் நூறு அம்புகளை அழுந்துமாறு எய்தான்; செறித்தலும் அவன் அவ்வாறு (அம்புகளைப்) பதியுமாறு அழுத்திய அளவில்; தேவர் அஞ்சி வெறித்தார் - தேவர்கள் அஞ்சித் திகைத்தார்கள்; வெறியாமுன் - (அவர்கள் அவ்வாறு) திகைப்பதற்கு முன்பே; பறவைக்கு இறை - (கழுகு என்னும்) பறவைகளுக்கு அரசன் ஆகிய சடாயு; விண்ணவர் பண்ணை ஆர்ப்ப - தேவர் கூட்டம் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய; இராவணன் வில்லைப் பல்லால் பறித்தான் - இராவணனது வில்லைத் (தன்) அலகினால் இழுத்துப் பிடுங்கினான். தன் கவசத்தைப் பிளந்த சடாயுவின் மீது இராவணன் நூறு அம்புகளை எய்தான். அது கண்டு வானவர் திகைத்தனர். உடனே சடாயு பாய்ந்து தேவர்கள் மகிழ்ச்சிப் பேரொலி செய்ய அவனது வில்லைப் பறித்தான். வெறித்தல் - திகைத்தல், பல் - ஈண்டு மூக்கு, பண்ணை - கூட்டம், அறுத்தான் - வினையாலணையும் பெயர். தடமார்பு - உரிச்சொல் தொடர். முந்தைய பாடலும் இதுவும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளமை காண்க. சடாயு இராவணன் போர் தொடர்ந்து இடையீடின்றி நடந்தது. 28 | 3431. | எல் இட்ட வெள்ளிக் கயிலைப் பொருப்பு, ஈசனோடும் மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி, வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் எனப் பொலிந்தான்- சொல் இட்டு அவன் தோள் வலி, யார் உளர், சொல்ல வல்லார்? |
எல் இட்ட - ஒளி பொருந்திய; வெள்ளிக் கயிலைப் பொருப்பு - வெள்ளி போல் (வெண்ணிறம்) விளங்கும் திருக் கைலாய மலையை; ஈசனோடும் - சிவபிரானோடு; மல் இட்ட தோளால் எடுத்தான் - (தன்) வலிமை மிக்க தோள் ஆற்றலால் எடுத்தவனாகிய (இராவணனது); சிலை வாயின் வாங்கி - வில்லை மூக்கால் பறித்துக் (கௌவி); வில் இட்டு உயர்ந்த நெடுமேகம் எனப் பொலிந்தான் - இந்திரவில் விளங்க உயர்ந்த பெரிய மேகம் என்னுமாறு (அச்சடாயு) விளங்கினான்; அவன் தோள் வலி - (எனவே) அச்சடாயுவின் தோளாற்றலை; சொல் இட்டுச் சொல்ல வல்லார் யார் உளர் - சொற்களைக் கொண்டு சொல்லி (விளக்க) வல்லவர்கள் யாவர் உளர். ஒருவருமில்லை என்பதாம். வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளிய தோள் வலி உடைய இராவணனது வில்லைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு வானில் நீண்ட மேகம் போல் விளங்கிய சடாயுவின் தோளாற்றலைச் சொற்களால் |