சடாயுவின் ஆற்றலால் தன் தேர், பாகன் தண்டாயுதம் ஆகியவற்றை இழந்து தோற்ற இராவணன் வெட்கம் கொண்டு, சடாயுவை அரன் வாளால் அழித்த பெருமையைப் பேரொலி செய்து வெளிப்படுத்தினான். சீதை வலையில் அகப்பட்ட மான் போல் துன்புற்றுக் கொள் கொம்பு ஒடியக் குலைந்து விழுந்த கொடி போல் இரதத்தில் விழுந்து துன்பப்பட்டாள். மிக்கான் - பெருமிதம் கொண்டான். தொள்கு - வலை சார்வு -பற்றுக்கோடு. காணாள் - முற்றெச்சம். கொள் கொம்பு - வினைத் தொகை. 44 கலிவிருத்தம் | 3447. | 'வன் துணை உளன் என வந்த மன்னனும் பொன்றினன்; எனக்கு இனிப் புகல் என்?' என்கின்றாள்; இன் துணை பிரிந்து, இரிந்து, இன்னல் எய்திய அன்றில்அம் பெடை என அரற்றினாள்அரோ. |
வன்துணை உளன் என - (யான் உனக்கு) வலிமையான துணையாக உள்ளேன் என்று; வந்த மன்னனும் பொன்றினன் - (எதிர்த்து) வந்த கழுகரசனாகிய சடாயுவும் அழிந்தான்; எனக்கு இனிப்புகல்என் - எனக்கு இனிக் கதி என்னவோ; என்கின்றாள் - என்று எண்ணுகின்றவள் ஆகிய சீதை; இன் துணை பிரிந்து இரிந்து - இனிமையான தனது துணையாகிய (ஆண் பறவையைப்) பிரிந்து நீங்கி; இன்னல் எய்திய - (பெருந்) துன்பம் அடைந்த; அன்றில் அம் பெடை என - அன்றில் பறவையின் அழகிய பெட்டை போல; அரற்றினாள் (அரோ) - கதறினாள். என்னைக் காக்க வந்த வலிமையான துணைவன் ஆகிய சடாயு அழிந்தான், இனி எனக்கு வேறு புகலிடம் ஏது?' என எண்ணிய சீதை ஆணைப் பிரிந்த அன்றிற் பேடு போலத் துன்புற்றுக் கதறினாள். அன்றில் - ஆணும் பெண்ணும் பிரியாமல் பனை மரத்தில் வாழும் ஒரு வகைப் பறவை என்பது இலக்கிய மரபு. புகல் - சரண்புகுமிடம்; தொழிலாகுபெயர். 45 | 3448. | 'அல்லல் உற்றேனை, வந்து, "அஞ்சல்" என்ற, இந் நல்லவன் தோற்பதே? நரகன் வெல்வதே? வெல்வதும் பாவமோ? வேதம் பொய்க்குமோ? இல்லையோ அறம்?' என, இரங்கி ஏங்கினாள். |
|