பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 605

சொல்லிய அற நெறி
     தொடர்ந்த தோழமை
நல் இயல் அருங் கடன்
     கழித்த நம்பியைப்
புல்லுதியோ?' என,
     பொருமிப் பொங்கினாள்.

    எல் இயல் - ஒளி பொருந்திய; விசும்பிடை இருந்த -
வானுலகத்தில் இருந்த; நேமியாய் - ஆணைச் சக்கரத்தை உடைய தசரத
சக்கரவர்த்தியே; சொல்லிய அறநெறி தொடர்ந்த - (நூல்களில்)
சொல்லப்பட்ட அறவழியைத் தொடர்ந்து; தோழமை - நண்பனுக்குரிய; நல்
இயல் அருங்கடன் கழித்த -
நன்மை பொருந்திய அரிய கடனைக்
கழித்த; நம்பியைப் புல்லிதியோ - சடாயுவை (வானுலகில்) தழுவிக்
கொள்ளுவாயோ?; எனப் பொருமிப் பொங்கினாள் - என்று கூறி விம்மி
அழுதாள்.

     முன்பே வானடைந்த தசரதச் சக்கரவர்த்தியே! ஒரு நண்பனுக்கு உரிய
கடன் கழிக்க வந்து உயிர் விட்ட உன் அருமைத் தோழனை அங்கு நீ
தோழமை மகிழ்வோடு அணைத்துக் கொள்வாயா என்று சீதை விம்மி
அழுதனள் என்க. எல் - ஒளி. தோழமை நல் இயல் அருங்கடன் -
இடுக்கண்களைவதாம் நட்பு (குறள் 788) என்றபடி பிறர் செய்ய விரும்பாத,
கடமை.                                                    49

இராவணன் சீதையைத் எடுத்துச் செல்லுதல்

3452. ஏங்குவாள் தனிமையும்,
     இறகு இழந்தவன்
ஆங்குறு நிலைமையும்,
     அரக்கன் நோக்கினான்;
வாங்கினன், தேரிடை
     வைத்த மண்ணொடும்,
வீங்கு தோள்மீக் கொடு,
     விண்ணின் ஏகினான்.

    ஏங்குவாள் தனிமையும் - (முன் சொன்ன படி) புலம்புகின்றவள்
ஆகிய சீதையினது துணையில்லாத தனிமையையும், இறகு இழந்தவன்
ஆங்குறு நிலைமையும் -
சிறகு இழந்தவன் ஆகிய சடாயு அவ்விடத்து
அடைந்த நிலைமையையும்; அரக்கன் நோக்கினான் - அரக்கனாகிய
இராவணன் பார்த்து; தேரிடை வைத்த மண்ணொடும் வாங்கினன் -
(இனித் தடுப்பார் இல்லை என எண்ணி) தேரின் மேல் பெயர்த்து எடுத்து
வைத்த நிலத்தோடு சீதையை எடுத்து; வீங்கு தோள் மீக்கொடு - (தன்)
பருத்த தோள்களின் மேல் வைத்துக் கொண்டு; விண்ணின் ஏகினான் -
ஆகாய வழியில் (இலங்கையை நோக்கிச்) சென்றான்.