| | தாம வார்கணைப் புட்டிலும் முதலிய தாங்கி, வாம மால் வரை மரன் இவை மடிதர, வயவர், பூமிமேல் அவன் தேர் சென்ற நெடுநெறி போனார். |
அமலனும் - குற்றம் அற்றவன் ஆகிய இராமனும்; 'ஆம் அதே இனி அமைவது' என்று - ஆம் அச் செயலே இனிச் செயத்தக்கது என்று கூறி; வயவர் - வீரர்களாகிய இராமலக்குவர்; தாமவார் கணைப்புட்டிலும் முதலிய மெய்யில் தாங்கி - மாலை போல் அமைந்த நீண்ட அம்பு அறாத்தூணி முதலிய (படைக்கலங்களை) உடம்பில் தரித்துக் கொண்டு; வாம மால் வரை - அழகுள்ள பெரிய மலைகள் (மற்றும்); மரன் இவை மடிதர - மரங்கள் ஆகிய இவை அழியும் படி; பூமிமேல் அவன் தேர் சென்ற நெடுநெறி போனார் - பூமியில் அந்த இராவணனது தேர் சென்ற நீண்ட வழியில் சென்றார்கள். அமலன், 'இனிச் செயத்தக்கது நீ கூறிய வாறே' என ஏற்றுக் கொண்டான். உடனே இருவரும் படைக்கலந்தாங்கி இராவணன் தேர் சென்ற வழியில் சென்றனர். தாமம் - மாலை போன்ற வடிவுடைய. வார் - நீண்ட. புட்டில் - அம்பு அறாத்தூணி. வாமம் - அழகு. வயவர் - வீரர். மரன் - கடைப்போலி. 77 | 3480. | மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து, விண்ணின் ஓங்கியது ஒரு நிலை; மெய் உற வெந்த புண்ணினூடு உறு வேல் என, மனம் மிகப் புழுங்கி, எண்ணி, 'நாம் இனிச் செய்வது என்? இளவலே!' என்றான். |
அவன் தேர் - சீதையை எடுத்துச் சென்றவனுடைய, தேரின் சக்கரப் பதிவுகள்; மண்ணின் மேல் சென்ற சுவடு எலாம் மாய்ந்து - மண்ணின் மேல் சென்ற அடையாளம் எல்லாம் மறைந்து; ஒரு நிலை - ஓர் இடத்தில்; விண்ணின் ஓங்கியது - அத்தேர் வானத்தில் உயர்ந்ததாகத் தெரிந்தது; (அது கண்ட இராமன்); மெய் உற வெந்த புண்ணினூடு உறுவேல் என - முழுதுமாய் வெந்த புண்ணுக்கு இடையில் நுழைந்த வேல் போல; மனம் மிகப் புழுங்கி - மனத்தால் மிகுதியாகத் தவித்து; இளவலே - இளையவனே; இனி நாம் எண்ணி என் செய்வது - இனிமேல் நாம் எண்ணிப் பார்த்து என்ன செய்வது; என்றான் - (என்று இலக்குவனிடம்) கூறினான். |