பக்கம் எண் :

626ஆரணிய காண்டம்

     ஆகும் அன்னதே கருமம் என்று - ஆம் அதுவே செய்யத்தக்க
செயல் என்று (இராமன் கூறி); அத்திசை நோக்கி ஏகி - (இருவரும்)
அந்தத் தென்திசையை நோக்கிச் சென்று; இரண்டு யோசனை சென்றார் -
இரண்டு யோசனை தூரம் சென்றார்கள்; இடை - அந்த இடத்தில்; மாக
மால் வரை கால் பொர மறிந்தது மான -
பெரிய மயக்கம் தருகிற மலை
ஒன்று பெருங் காற்று வீசுதலால் (நிலத்தில்) விழுந்து கிடந்தது போல்; பாக
வீணையின் கொடி ஒன்று பார்மேல் கிடந்தது -
துணிபட்ட வீணை
வடிவம் எழுதிய கொடி ஒன்று நிலத்தின் மேல் கிடந்ததை'; எதிர்ந்தார் -
கண்டார்கள்.

     இலக்குவன் கூறியதை இராமன் ஏற்றுக் கொள்ள, இருவரும் சீதையை
எடுத்துச் சென்ற பகைவனைத் தேடித் தென் திசையில் இரண்டு யோசனை
தூரம் சென்றார்கள். செல்லும் வழியில் காற்றால் பெருமலை ஒன்று விழுந்து
கிடப்பதைப் போல் விழுந்து கிடந்த துண்டான வீணை வடிவம் எழுதப்பட்ட
கொடி ஒன்றைக் கண்டார்கள். மாகம் - பெரிய மால் - மயக்கம், கால் -
காற்று, பாக வீணையின் கொடி - துண்டுபட்ட வீணை வடிவம் எழுதிய
கொடி, மான - உவம உருபு.                                    80

3483. கண்டு, 'கண்டகரோடும், அக்
     காரிகை பொருட்டால்,
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர்
     விளைந்தது?' என்று அயிர்த்தார்;
துண்டவாளினின் சுடர்க் கொடி
     துணிந்தது என்று உணரா,
புண்டரீகக் கண் புனல்வர,
     புரவலன் புகல்வான்:

    கண்டு - (அக் கொடியைப்) பார்த்து; அக்காரிகை பொருட்டால் -
அந்த அழகு நீர்மை உடைய சீதையின் பொருட்டு; கண்டகரோடும் -
(கவர்ந்து சென்ற) கொடியவர்களோடு; அண்டர் ஆதியர்க்கு - தேவர்கள்
முதலானவர்களுக்கு; ஆர் அமர் விளைந்தது - கொடிய போர் நடந்தது
போலும்; என்று அயிர்த்தார் - என்று ஐயங் கொண்டார்கள்; புரவலன் -
இராமன்; துண்ட வாளினின் - (சடாயுவின்) அலகாகிய வாளினால்;
சுடர்கொடி துணிந்தது என்று உணரா - ஒளியுடைய இக் கொடி
துண்டுப்பட்டது என்று உணர்ந்து; புண்டரீகக் கண் புனல் வர - தன்
தாமரை மலர் போன்ற கண்களில் கண்ணீர் ஒழுக; புகல்வான் - கூறத்
தொடங்கினான்.

     அக்கொடியைக் கண்டு சீதை காரணமாகத் தேவர்களுக்கும் கவர்ந்து
சென்ற பகைவர்களுக்கும் இடையில் போர் நடந்ததோ என்று முதலில்
ஐயங் கொண்டு, பிறகு சடாயுவினது அலகினால் அக் கொடி துண்டானதை
உணர்ந்து தன் தாமரை மலர் போன்ற கண்களில் கண்ணீர் பெருக இராமன்
கூறத் தொடங்கினான். கண்டகர் - பகைவர். காரிகை - அழகு. துண்டம் -
அலகு. புண்டரீகம் - செந்தாமரை. துண்டவாளினின் - உருவகம். உணரா -