பக்கம் எண் :

அகத்தியப் படலம் 63

கலிவிருத்தம்

2618.இன்னன பல நினைந்து,
     ஏத்தினன் இயம்பா,
துன்னுதல் இடை உளது என
     நனி துணிவான்,
தன் நிகர் முனிவனை,
     'தர விடை' என்னா,
பொன் ஒளிர் நெடு முடிப்
     புரந்தரன் போனான்.

    பொன் ஒளிர் நெடுமுடிப் புரந்தரன் - பொன்னால் விளங்கும் நீண்ட
கிரீடத்தை உடைய இந்திரன்; இன்னன பல நினைந்து - இவ்விதம் பலவாறு
எண்ணி; இயம்பா ஏத்தினன் - இராமனை வாயால் கூறி வணங்கினான்;
இடை துன்னுதல் உளது என நனி துணிவான் - நடுவில் நிகழ்வது
உள்ளது என மிகவும் துணிந்தவனாய்;தன்நிகர் முனிவனை -
தனக்குத்தானே ஒப்பான சரபங்கரை நோக்கி; விடை தர என்னா -யான்
செல ஒப்புதல் அளிப்பீராக என்று சொல்லி; போனான் - சென்றான்.

     துன்னுதல் இடையுளது என்றது இராமன் வரவால் அங்கு நடக்க
இருப்பதை ஒரளவு ஊகித்தான்என்பதாம். சரபங்க முனிவரின் தன்னிகரற்ற
தன்மை, இந்திரன் வேண்டிய போது பிரமலோகப்பதவியை
வேண்டாதொதுக்கியமையாலும் இராமன் அவரை நாடி வந்து அருள் தரும்
பேறு பெற இருப்பதாலும்உணரப்பெறும். இந்திரன் இராமனிடம் விடை
பெற்றான் என்பது அருத்தாபத்தி, புரந்தரன் -பகைவர் நரர்களை அல்லது
உடல்களை அழிப்பவன், தர அகர ஈற்று வியங்கோள். என்னா - செய்யா
எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினையெச்சம்.                      32

இராமன் முதலியோர் சரபங்கன் குடிலில் தங்குதல்

2619.போனவன் அக நிலை
     புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு
     எதிர் கொண்டான்;
ஆனவன் அடி தொழ, அருள்
     வர, அழுதான்
தானுடை இட வகை
     தழுவினன், நுழைவான்.

    போனவன் அகநிலை புலமையின் உணர்வான் - போன
இந்திரனின் மனநிலையை ஞானக் கண்ணால் சரபங்கர் அறிபவராகி; வானவர்
தலைவனை வரவுஎதிர் கொண்டான்-
தேவர்களின் தேவனாம் இராமனை