தழுவி நின்றான் - மனத்தில் (முழுதும்) ஏற்று நின்றவனாய்; இனி அயல் முனிவது என்னை - இனிமேல் பிறரைச் சினத்தலால் யாது பயன்?; அரக்கரை தம் வருக்கம் தீர்க்கும் - அரக்கர்களின் இனத்தை (முழுதுமாக) அழிக்கும்; செயல் இனிச் செயல் - செயலே இனிச் செய்ய வேண்டிய செயல்; என்று எண்ணி - என்று மனத்தில் சிந்தித்துப் பார்த்து; கண்ணிய சீற்றம் தீர்ந்தான் - மனத்தில் தோன்றிய சினத்தை விட்டான். தந்தை சொல் தலை மேற் கொண்ட இராமன், சடாயுவின் சொற்களைத் தந்தை சொல்லாகவே ஏற்று, அரக்கரை வேரோடு அழித்தலே செயத்தக்கது எனத் தேர்ந்து சீற்றம் விட்டனன். புயல் - மேகம், பண்பு குறித்ததாகவும் கொள்ளலாம். அவ்வாறாயின் மேகம் போல் இன்னார் இனியார் என்னாது அருள் செய்பவன் இராமன் எனக் கொள்க. ஆண்டு - அப்பொழுது; பணி - கட்டளை அல்லது ஆணை. 126 வீரச் சடாயுவின் தெய்வ மரணம் 3529. | ஆயபின், அமலன் தானும், "ஐய! நீ அமைதி" என்ன வாயிடை மொழிந்தது அன்றி, மற்று ஒரு செயலும் உண்டோ? போயது அவ் அரக்கன் எங்கே? புகல்' என புள்ளின் வேந்தன் ஓய்வினன்; உணர்வும் தேய, உரைத்திலன்; உயிரும் தீர்ந்தான். |
ஆயபின் - இவ்வாறு சீற்றம் தீர்ந்த பிறகு; அமலன் தானும் - குற்ற மற்றவனாகிய இராமனும்; ஐய - (சடாயுவைப் பார்த்துத்) தந்தையே; நீ அமைதி என்ன வாயிடை மொழிந்தது அன்றி - நீ அமைதியாக இரு என்று (உன்) வாயால் கூறியபடி அல்லாமல்; மற்று ஒரு செயலும் உண்டோ - வேறு நான் செயத்தக்க செயல்கள் ஏதேனும் உளதா (இல்லை என்றபடி); அவ்வரக்கன் போயது எங்கே புகல் என - அந்த அரக்கனாகிய இராவணன் சென்றது எங்கே (என்று) கூறுக என்று (கேட்க); புள்ளின் வேந்தன் - பறவைகளுக்குத் தலைவனாகிய சடாயு; ஓய்வினன் - தளர்ச்சி உடையவனாய்; உணர்வும் தேய - அறிதலுணர்வும் குறைய; உரைத்திலன் - (இராமன் கேட்டதற்கு) விடை ஒன்று கூற மாட்டாதவனாய்; உயிரும் தீர்ந்தான் - உயிரும் விட்டான். 'நீ கூறியதை ஏற்றலே என் கடன், அது தவிர வேறு பணி எனக்கு இல்லை' என்று கூறிய இராமன், 'இராவணன் யாண்டையான்' என வினவினான்; சடாயு அதற்கு விடை கூறு முன்பே உயிர் விட்டனன். ஓய்வினன், உரைத்திலன் - முற்றெச்சங்கள். 127 |