பக்கம் எண் :

658ஆரணிய காண்டம்

தன்னோடு; தம்பியும் - தம்பியாகிய இலக்குவனும்; அழுது சோர - அழுது
மெலிய; காடு அமர் மரமும் - காட்டில் உள்ள மரங்களும்; மாவும் -
மிருகங்களும்; கற்களும் - மலைகளும்; கரைந்து சாய்ந்த - (இராமனின்
சோகம் கண்ட இரக்கத்தினால்) கரைந்து தளர்ந்தன; விரிஞ்சனே முதல
மேலோர் -
பிரமன் முதலிய மேலுலகத்தவர்களும்; சேடரும் - கீழ்
உலகத்தினராகிய நாகர்களும்; பாருளோரும் - (இடைப்பட்ட) நில
உலகத்தில் உள்ள மக்களும்; கரம் சிரம் சேர்த்தார் - (சடாயுவின் செயல்
கண்ட மதிப்பினால்) கைகளைத் தலைமேல் சேர்த்து வணங்கினார். அன்றே
-
ஈற்றசை.

     இராமலக்குவர் சடாயுவின் இறப்பிற்கு அழுது தளர, இராமனின்
சொரூபமாக உள்ள அனைத்தும் கரைந்து தளர்ந்தன. மூவுலகத் தவரும்
சடாயு பரமபத மடைதலைக் கண்டு தலை மேல் கை குவித்து வணங்கினர்.
தன்னுயிரைப் புகழுக்கு விற்று இராம கைங்கர்யம் செய்து, திருவடிக் காட்சி
பெற்று பரமபதமடைந்த சடாயுவை மூவுலகத்தவரும் தலை மேல் கை
குவித்து வணங்கினர் என்பதாம். அமர்தல் - மேவல். சேடர் -
கீழுலகத்தவர்களாகிய நாகர்கள். பாருளோர் - நிலவுலகத்தவர். விரிஞ்சனே
- ஏகாரம் சிறப்புப் பொருள் குறித்தது.                           129

இராமன் தளர, இளையவன் தேற்றுதல்

3532.'அறம்தலை நின்றிலாத அரக்கனின்,
     ஆண்மை தீர்ந்தேன்;
துறந்தனென், தவம் செய்கேனோ?
     துறப்பெனோ உயிரை? சொல்லாய்;
பிறந்தனென் பெற்று நின்ற
     பெற்றியால், பெற்ற தாதை
இறந்தனன்; இருந்துளேன் யான்; என்
     செய்கேன்? இளவல்!' என்றான்.

    இளவல் - இளைய தம்பியே!; அறம் தலை நின்றிலாத அரக்கனின்-
அறவழியில் நிலைத்து நிற்றல் இல்லாத அரக்கனால்; ஆண்மை
தீர்ந்தேன் -
ஆண்மையை இழந்தவனாகிய (யான்); துறந்தனென் தவம்
செய்கேனோ -
முற்றும் துறந்தவனாய்த் தவம் செய்வேனோ?; உயிரை
துறப்பெனோ -
உயிரை விட்டு விடுவேனோ?; சொல்லாய் - (இரண்டில்
தக்கது எது என நீ) சொல்வாய்; பெற்று நின்ற பெற்றியால் - (என்னை
மகனாகப்) பெற்று நின்ற தன்மையால்; பெற்ற தாதை இறந்தனன் -
(என்னைப்) பெற்ற தயரதனும் (ஆரண்யத்தில் பெற்ற தந்தையாகிய
சடாயுவும்) இறந்து போனான்; பிறந்தனென் யான் இருந்துளேன் -
(மகனாகப்) பிறந்தவனாகிய நான் (இன்னும் உயிர் தாங்கி) இருக்கிறேன்;
என் செய்கேன் - எதைச் செய்யக் கடவேன்; என்றான் - என்று இராமன்
கூறினான்.

     அறந்தலை நின்றிலாத அரக்கனின் வஞ்சனையால் பழியைப் பெற்று,
பெற்ற தந்தையாகிய தயரதனையும், உற்ற தந்தையாகிய சடாயுவையும்