(உரிய முறைப்படி) பயன்படுத்திச் (சடாயுவின் உடலுக்கு இட்டு); இருகை தன்னால் ஏந்தினன் - அவ்வுடலைத் தன் இரண்டு கைகளாலும் எடுத்து; ஈமம் தன்மேல் ஏற்றினன் - (விறகுகள் அடுக்கப்பட்ட) ஈம மணல் மேடையின் மேல் ஏற்றி; தலையின் சாரல் காந்து எரி கஞல மூட்டி - தலைப் பக்கத்தில் எரிகிற நெருப்பைப் பற்ற வைத்து; கடன் முறை கடவா வண்ணம் - செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாதவாறு; நேர்ந்தனன் - செய்தான். சடாயுவின் உடலுக்கு, நீரும், சந்தனமும், மலரும் இட்டு அலங்கரித்து, இரு கையில் ஏந்தி, ஈம மணல் மேடையில் ஏற்றித் தலைப் பக்கத்தில் எரிகிற நெருப்பைப் பற்ற வைத்து, செய்ய வேண்டியவற்றை முறை தவறாது இராமன் செய்தனன் என்க. சாரல் - பக்கம், கஞலுதல் - நெருங்குதல். 135 3538. | தளிர்த்தன கிளர்ந்த மேனித் தாமரைக் கெழுமு செம்பூத் துளித்தன அனைய என்னத் துள்ளி சோர் வெள்ளக் கண்ணன் குளித்தனன், கொண்டல், ஆற்று; குளித்தபின், கொண்ட நல் நீர் அளித்தனன்-அரக்கர்ச் செற்ற சீற்றத்தான்-அவலம் தீர்ந்தான். |
அரக்கர்ச் செற்ற சீற்றத்தான் - அரக்கர்களை அழிக்க வேண்டும் என்ற சினத்தினால்; அவலம் தீர்ந்தான் - (சீதையைப் பிரிந்த) துன்பத்தை நீக்கியவனாகிய இராமன்; தளிர்த்தன கிளர்ந்த மேனி - தளிரின் நிறத்தன்மை உடைய செழிப்பொடு கூடிய (தன்) உடலில்; தாமரைக் கெழுமு செம்பூ - தாமரையின் செழிந்த சிவந்த மலர்; துளித்தன அனைய என்ன - (தேன்) துளிகளைத் துளிர்த்ததை ஒத்தது என்னுமாறு; துள்ளி சோர் வெள்ளக் கண்ணன் - துளியாக வடிகிற கண்ணீர்ப் பெருக்கு உடையவனாய்; கொண்டல் ஆற்றுக் குளித்தனன் - மேகம் ஆற்றில் படிவதைப் போல (ஆற்றில்) குளித்தான்; குளித்த பின் - குளித்து முடித்த பிறகு; கொண்ட நல் நீர் அளித்தனன் - (தன் கையில் கொண்ட) நல்ல நீரை நீர்க்கடனாகக் கொடுத்தான். இராமன் கண்களுக்குத் தாமரை மலரும் அவன் கண்களில் இருந்து வழியும் கண்ணீருக்கு அம்மலரில் இருந்து வெளிப்படும் தேனும் உவமைகளாயின. இராமன் ஆற்றில் மூழ்கிக் குளித்தது, ஆற்றில் மேகம் படிந்தது போன்றது என்றவாறு. கொண்டல் - மேகம் போன்ற இராமன், துள்ளி - விரித்தல் விகாரம். 136 3539. | மீட்டு இனி உரைப்பது என்னே? விரிஞ்சனே முதல மேல், கீழ் காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின; களித்த போலாம்; |
|