பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 665

11. அயோமுகிப் படலம்

    அயோமுகி என்ற அரக்கியின் செயல்களை விளக்குவது, அயோமுகிப்
படலம் ஆகும். இது அயோமுகியைப் பற்றிக் கூறப்பட்ட படலம் என
விரிந்து நிற்கும். அயோமுகி என்ற சொல் இரும்பினால் ஆகியது போன்ற
முகம் உடையவள் என்று பொருள் தரும். இலக்குவன்பால் காதல் கொண்ட
அயோமுகியின் செயல்கள் இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன. இராமன்
மேல் காதல் கொண்டு இலக்குவனால் உறுப்பிழந்த சூர்ப்பணகையின்
பாவிகம் சார் முதல் கதைக்கு ஒத்த இணைக் கதையாக இது விளங்குகிறது.
அயோமுகி ஒரு நிகழ்ச்சிப் பாத்திரமாவாள். கதையில் இராமனும்
இலக்குவனும் பிரியும் சிறு பிரிவுக்கு இவள் வழி வகுக்கிறாள். அப்பிரிவின்
அவல உணர்வும், பாசப் பிணைப்பும் இப்பகுதியில் கம்பரால் சிறப்பாக
விளக்கப்பட்டுள்ளமை அறியற்பாலது.

     சடாயுவுக்கு உரிய நீர்க் கடன் செய்த பின் இராமன் இலக்குவனுடன்
சீதையைத் தேடிக் கொண்டு செல்லுகிறான். செல்லும் வழியில் நீர் வேட்கை
கொண்ட இராமன், இலக்குவனை நீர் கொண்டு வருமாறு வேண்டுகிறான்.
இலக்குவன் நீர் கொண்டு வரச் சென்ற வழியில் அயோமுகி இலக்குவன்
மீது காதல் கொண்டு, தன் மோகனை என்னும் மந்திர வலிமையால்
அவனை மயக்கி வலிய எடுத்துச் சென்றாள். மோக மந்திர வலிமை அவள்
தழுவி எடுத்த உடனே நீங்கிவிட்டது. இலக்குவன் அவளது உறுப்புக்களைத்
துணித்து மீண்டும் இராமனிடம் வந்த செய்தி இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.

     இப்படல நிகழ்ச்சிகள் - முழுவதும் இரண்டு இரவு மற்றும் ஒரு பகல்
நேர நிகழ்ச்சியாகும். இரவின் - காரிருளில் சீதையைப் பிரிந்து வருந்தும்
இராமனது அவலத்தைக் கவிஞர் நெஞ்சுருக விவரித்துள்ளார்.
துணைவிக்காக மட்டுமன்றித் துணையாக வந்த இலக்குவனுக்குக் கூறவும்
யுத்த காண்ட நாகபாசப் படலத்தில் இராமன் வருந்துதலும் (8221 - 8227)
மீண்டும் பிரமாத்திரப் படலத்தில் வருந்துதலும் (8637 - 8660) இங்குக்
குறிக்கத்தக்க குறிப்பு. இவ் வவலப் புலம்பல்களுக்கு முன்னோடியாக
இப்படலத்தில் (3603 - 3617) இராமனின் துயர் புலப்படுத்தும் அவலப்
பாடல்கள் அமைந்துள்ளன. மானிடச் சட்டையில் வந்த இறைவன் மானுட
உணர்ச்சிகளை வெளிக் காட்டும் மனிதனாக இங்குக் காட்சி தருகிறான்.

இராமலக்குவர் மலையில் தங்குதல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

3541. அந்தி வந்து அணுகும்வேலை,
     அவ் வழி, அவரும் நீங்கி,
சிந்துரச் செந் தீக் காட்டு ஓர்
     மை வரைச் சேக்கை கொண்டார்;