| இந்திரற்கு அடங்கல்செல்லா இராக்கதர் எழுந்ததென்ன, வெந் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே. |
அந்தி வந்து அணுகும் வேலை - அந்தி மாலைப் பொழுது வந்து சேரும் வேளையில்; அவரும் - அந்த இராமலக்குவர்கள்; அவ்வழி நீங்கி- அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு; செந்தீ சிந்துரக் காட்டு - சிவந்த தீயினைப் போல சிந்துரப் பொடிகள் (காட்சி) காட்டுகிற; ஓர் மை வரைச் சேக்கை கொண்டார் - ஒரு பெரிய மலையைத் (தாங்கள்) தங்குமிடமாகக் கொண்டார்கள்; வெந்துயர்க்கு ஊற்றம் ஆய - பெருந்துன்பத்துக்கு வலிய இடமாக; விரி இருள் - (எங்கும்) பரவிய இருள்; இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்ததென்ன - இந்திரனுக்கு அடங்காத அரக்கர்கள் ஒன்றாக வந்து தோன்றியது போல; வீங்கிற்று - எழுந்து பரவியது. சடாயுவின் இறுதிக் கடன் முடித்த இராமலக்குவர் ஒரு மலையில் தங்கினர். அப்போது இந்திரனுக்கு அடங்காத அரக்கர் எங்கும் தோன்றியதைப் போல காரிருள் எழுந்து எங்கும் பரவியது. வெந்துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் - சீதையைப் பிரிந்த இராமனுக்குப் பெரும் வேதனையைத் தருவதாலும், இலக்குவனைச் சிறுபொழுது பிரிந்து இராமன் வருந்தக் காரணமாக இருப்பதாலும் இவ்வாறு கூறப்பட்டது. இப்படலத்தில் "விரி இருள் வீங்கிற்று" கம்ப. (3541) என்ற தொடக்கமும், "துன்னிய செங்கதிர்ச் செல்வன் தோன்றினான், (3641) புலம்புறு விடியலில் கடிது போயினார். (3642) என்ற முடிவும் அமைந்திருப்பதால் இப்படல நிகழ்ச்சிகள் எல்லாம் இரு இரவு ஒரு பகல் நிகழ்ச்சிகளே என்பதை அறியலாம். அந்தி என்ற சிறு பொழுது தொடக்கமாகவும் விடியல் என்ற சிறுபொழுது முடிவாகவும். அமைதலின் சிறப்பை எண்ணுக. அந்தி - பகல் பொழுதின் பிற்கூறு, மை - பெரிய சேக்கை - படுக்கை, வீங்குதல் - மிக்குத் தோன்றுதல். செல்லா - ஈறு கெட்ட எதிர் மறைப் பெயரெச்சம், வெந்துயர் - பண்புத்தொகை, விரிஇருள் - வினைத்தொகை. அன்றே - ஈற்றசை. 1 உறக்கம் இன்றித் துயரால் நலிதல் 3542. | தேன் உக அருவி சிந்தி, தெருமரல் உறுவ போல, கானமும், மலையும், எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல், மானமும் சினமும் தாதை மரணமும், மைந்தர் சிந்தை, ஞானமும் துயரும் தம்முள் மலைந்தென, நலிந்த அன்றே. |
கானமும் மலையும் எல்லாம் - காடுகளும் மலைகளும் ஆகிய எல்லாமும்; தெருமரல் உறுவ போல - (இராமலக்குவர் துன்பத்துக்கு) மனச் |