| மான் வரு தனி உரி மார்பினை!' எனலும், மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன் ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான்: |
மான் வரு தனிஉரி மார்பினை - மானிடத்து அடையப் பெற்றதான ஒப்பற்ற தோலைத் தரித்த மார்பை உடைய முனிவ!; யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ எனலும் - நான் இங்கு வந்த இப்பொழுது இப்படி உயிர்விடும்செயலை நீர் செய்வது ஏனோ என்று இராமன் கேட்டதும்; மீன் வரு கொடியவன் விறல் அடும்மறவோன் - மீன் உரு எழுதிய கொடியை உடைய மன்மதனின் வலிமையை அழித்த தவவலியுடையசரபங்கர், ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் - தன் உடலைவிட்டு நீங்கும்மகிழ்ச்சி மிகுந்து பின்வரும் சொற்களை நன்கு விரும்பிச் சொன்னார். அமைதி - சமயம், தவம்புரி முனிவர் மான்தோல் போர்த்தல் மரபு. திருமுருகாற்றுப்படையில்'மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்' (முருகு. 128-9) என வருதல் காண்க. மீன்வரு கொடியவன்விறல் அடும் மறவோன் என்ற தொடர் சரபங்கர் எனப் பெயர் பெற்றதற்குக் காரணமாக அமைகிறது.விறல் அடும் அறவோன் எனவும் பிரிக்க இடமுண்டு. ஊன் ஆகுபெயர் எவனோ - ஓகாரம்,அசை. 39 2626. | 'ஆயிர முகம் உள தவம் அயர்குவென், யான்; "நீ இவண் வருகுதி" எனும் நினைவு உடையேன்; போயின இரு வினை; புகலுறு விதியால் மேயினை; இனி ஒரு வினை இலை;-விறலோய்! |
விறலோய் - வெற்றி வீரனே!; யான் ஆயிரமுகம் உளதவம் அயர்கு வென் - நான் பலவகைப்பட்டதவங்களைச் செய்பவன்; நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் - நீ இவ்விடத்தில்எழுந்தருள்வாய் என்னும் நினைவு மேற் கொண்டுள்ளேன்; புகலுறு விதியால் போயின இருவினை - நேரிடும் முறைப்படி இரண்டு வினைகளும் அழிந்தன; மேயினை - அதன் பயனாய் நீ இங்குஎனக்கு அருள்புரிய வந்தாய்; இனி ஒரு வினை இலை - இனிமேல் நான் செய்யத்தக்க செயல்வேறு இல்லை. |