பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 671

நாகம், துளை எயிறு - பிறை நிலவு, நிலவு ஒளி - நஞ்சு என்க. களியுடை
அனங்கன் - பிரிந்தவரைத் துன்பப்படுத்தி அவர் தம் வருத்தத்தில் இன்பம்
காண்பவன்; காம மயக்கத்தைப் பிறக்கச் செய்யும் போதை உடையவர்
எனலுமாம். அனங்கன் - உருவம் அற்றவன் (மன்மதன்) அங்க நாட்டில்
உள்ள காமன் ஆச்சிரமச் சிறப்பை இராமனுக்கு உரைத்த விசுவாமித்திரர்.

    "திங்கள் மேவும் சடைத் தேவன் மேல், மாரவேள்
    இங்கு நின்று எய்யவும், எரிதரும் நுதல் விழிப்
    பொங்கு கோபம் சுட, பூளை வீ அன்ன தன்
    அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான்(339)
    வாரணத்து உரிவையான் மதனனைச் சினவு நாள்,
    ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால், இவண் எலாம்
    ஆரணத்து உறையுளாய்; அங்க நாடு; இதுவும் அக்
    காரணக் குறியுடைக் காமன் ஆச்சிரமமே (340)

என்று மன்மதன் அனங்கன் ஆனதைக் கூறுவார். நளி - செறிவு,
துளை எயிறு - துளை பொருந்திய நச்சுப் பல், நளி இருள் - உரிச்சொல்
தொடர், இருட்பிழம்பு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. ஊறல் -
தொழிலாகுபெயர். அன்றே - ஈற்றசை.                             7

3548. இடம்படு மானத் துன்பம், இருள்தர,
     எண்ணின் தீர்ந்தான்
விடம் பரந்தனையது ஆய வெண்
     நிலா வெதுப்ப, வீரன்,
படம் பரந்தனைய அல்குல், பால்
     பரந்தனைய இன் சொல், 
தடம் பெருங் கண்ணினாள்தன்
     தனிமையை நினையலுற்றான்.

    வீரன் - வீரனாகிய இராமன்; விடம் பரந்தனையது ஆய - நஞ்சு
(எங்கும்) பரந்தது போன்றதாகிய; வெண் நிலா வெதுப்ப - வெள்ளிய
நிலவு (ஒளியானது) (தன்னை) வருத்தவும்; இடம்படு மானத் துன்பம்
இருள்தர -
(தனக்கு ஏற்பட்ட) பெரிய அவமானமாகிய துன்பம் (சீதையை
இராவணன் கவர்ந்து சென்றது) அறிவைக் கெடுக்கவும்; எண்ணின்
தீர்ந்தான் -
மற்ற எண்ணங்கள் நீங்கினவனாகி; படம் பரந்தனைய
அல்குல் -
பாம்பின் படம் விரிந்தது போன்ற அல்குலினையும்; பால்
பரந்தனைய இன் சொல் -
பாலில் (கலந்து) பரந்துள்ள இனிமை போன்ற
இனிய சொற்களையும்; தடம் பெருங் கண்ணினாள் - (காதளவோடி) நீட்சி
அமைந்த கண்களையும் உடையவளாகிய; தன் தனிமையை
நினையலுற்றான் -
(சீதை) தன் தனிமையைப் பற்றி எண்ணுபவன் ஆனான்.

     நஞ்சு பரந்தது போல் எங்கும் நிலவு ஒளி பரவித் தன்னை
வருத்துதலால் இராமன் மானத் துன்பம் அறிவை அழிக்க வேறு ஒரு
நினைவும் இன்றிச் சீதையின் தனிமை குறித்து எண்ணத் தொடங்கினான்.   8