(இராவணனிடம் இருந்து தன்னை மீட்க) வளைந்த வில்லினை உடைய (கணவன்) வருவான் வருவான் என்று நினைத்து; இருபாங்கும் நீள் நெறி பார்த்தனளோ - இரு பக்கங்களிலும் உள்ள நீண்ட வழியைப் பார்த்துக் கொண்டிருப்பாளோ?; எனும் - என்று எண்ணினான். கடல் அலை போல் மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்ட இராமன் வருவான் வருவான் என்று சீதை இரு பக்கங்களிலும் உள்ள நீண்ட வழியைப் பார்த்துக் கொண்டிருப்பாளோ என்று எண்ணினான். 'சுருதி நாயகன் வரும் வரும்' என்பது ஓர் துணிவால் கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் (5077) என்ற கவிக்கூற்று இங்கு ஒப்பிடத்தக்கது. வாங்குதல் - வளைத்தல், பாங்கு - பக்கம், நெறி - வழி, வரும் வரும் - அடுக்குத் தொடர்; வருவது உறுதி என்ற பொருள் குறித்தது. ஓங்கி ஓங்கி - அடுக்குத் தொடர் இடையீடு இல்லாமல் என்ற பொருளது. 10 3551. | தன் நினைந்திலள் என்பது சாலுமோ - மின் நினைந்த விலங்கும் எயிற்றினான், "நில் நில்" என்று நெருங்கிய போது அவள் என் நினைந்தனளோ?' என எண்ணுமால். |
மின் நினைந்த விலங்கும் எயிற்றினான் - மின்னலைப் போல இடை விலகியுள்ள பற்களை உடைய இராவணன்; நில் நில் என்று நெருங்கிய போது - நில் நில் என்று கூறிக் கொண்டு நெருங்கிய போது; அவள் தன் நினைந்திலள் என்பது சாலுமோ - அந்தச் சீதை என்னை நினைக்கவில்லை என்று கூறுவது பொருந்துமோ?; என் நினைந்தனளோ - என்னைப் பற்றி என்னென்ன நினைத்தாளோ?; என எண்ணும் - என்று இராமன் எண்ணினான். 'இராவணன் தன்னை நெருங்கிய போது சீதை என்னை நினைக்கவில்லை என எண்ணுவது பொருந்துமோ? அவள் என்னென்ன நினைத்தாளோ' என்று இராமன் எண்ணினான். தன் என்றது ஈண்டு இராமனை; இதைச் சீதையைக் குறிப்பதாகக் கொண்டும் உரை கூறலாம். சாலுதல் - பொருந்துதல், என் நினைத்தனளோ - தன்னைக் காக்க வேண்டிய காலத்துக் காக்க வராமையால் மாரீசனின் மாயக் குரல் கேட்டு முன்னமே மனம் கலங்கி இருந்த சீதை யாது கருதினாளோ என்றபடி. விலங்குதல் - இடைவெளியுடன் அமைதல். நில் நில் - அடுக்கு சினக் குறிப்பினது. ஆல் - ஈற்றசை. 11 3552. | 'நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் |
|