| வஞ்ச வாயில் மதி என மட்குவாள், "வெஞ்சினம் செய் அரக்கர் தம் வெம்மையை அஞ்சினான் கொல்?" என்று ஐயுறுமால்' என்பான். |
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் - நஞ்சினை வெளிப்படுத்துகிற பற்களை உடைய நீண்ட (இராகு என்னும்) பாம்பினது; வஞ்ச வாயில் மதி என மட்குவாள் - கொடிய வாயின் கண் பட்ட நிலவு போல் ஒளி மழுங்கியவளான (சீதை); "வெஞ்சினம் செய் அரக்கர் தம் - கொடிய சினத்தைச் செய்கிற அரக்கர்களுடைய; வெம்மையை அஞ்சினான் கொல் - கொடுமையான (வலிமைக்கு) அஞ்சினான், (தன்னை மீட்க வராமையால்) போலும்"; என்று ஐயுறும் என்பான் - என்று ஐயப்படுவாள் என எண்ணினான். நாகத்தின் வாய்ப்பட்ட மதி தன் ஒளி குன்றுதல் போல் இராவணன் வயப்பட்ட சீதை ஒளி குன்றினாள் என்றபடி. நாகத்தின் வஞ்ச வாயின் பட்ட மதி இராவணன் கையகப்பட்ட சீதைக்கு உவமை. நாகம் - இராவணன், மதி - சீதை. காலுதல் - வெளிப்படுத்தல், உமிழ்தல். நகை - பல். மட்குவாள் - ஒளி மங்கிக் குறைவாள். கொல் - ஐயப்பொருள் தருவதோர் இடைச் சொல், ஆல் - அசை. 12 3553. | பூண்ட மானமும், போக்க அருங் காதலும், தூண்ட நின்று, இடை தோமுறும் ஆர் உயிர், மீண்டு மீண்டு வெதுப்ப, வெதும்பினான், 'வேண்டுமோ எனக்கு இன்னமும் வில்?' என்பான். |
பூண்ட மானமும் - (இராவணன் சீதையைக் கவர்ந்ததால்) தனக்கு ஏற்பட்ட அவமானமும்; போக்க அருங்காதலும் - (அவள் மீது கொண்ட) நீக்க முடியாத காதலும்; தூண்ட - தூண்டுதலினால்; இடைநின்று - நடுவில் நின்று; தோமுறும் - துன்பம் அடைகிற; ஆர் உயிர் - (தன்) அருமையான உயிரை; மீண்டு மீண்டு வெதுப்ப - (அவை - அவமானமும், காதலும்) மாறி மாறி வருத்துவதனால்; வெதும்பினான் - மனம் வருந்தினவனாகிய (இராமன்); எனக்கு இன்னமும் வில் வேண்டுமோ என்பான் - எனக்கு இனிமேலும் (கையில்) வில் வேண்டுமோ என்று கூறினான். அவமானமும் காதலும் தேய் புரிப் பழங்கயிற்றைப் பற்றிய இரு யானைகள் போலத் தன் உயிரை அலைக்கழித்தலால் பெருந்துன்பம் |