| | 'சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து' என்ன, மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெங் கானம் போயினரால். |
இள வீரன் - இளைய வீரனாகிய இலக்குவன்; அன்ன காலை - அப்பொழுது; அடியின் வணங்கி - (இராமனது) அடிகளில் வணங்கி; 'நெடியோய் - (புகழில்) பெரியவனே; அப்பொன்னை நாடாது - அந்தச் சீதையைத் தேடாமல்; ஈண்டு இருத்தல் புகழோ - இவ்வாறு இங்கு (வீணாக) இருப்பது புகழைத் தரும் செயலோ?'; என்ன - என்று கூற; புகழோனும் - புகழ் மேம்பட்ட இராமனும்; 'சொன்ன அரக்கன் - (சடாயு) சொல்லிய அரக்கன்; இருக்கும் இடம் - இருக்கின்ற இடத்தைத்; தொடர்ந்து துருவி அறிதும் - (நாம்) தொடர்ந்து சென்று தேடிக் காண்போம்; என்ன - என்று சொல்ல; மின்னும் சிலையார் - (அதற்குப் பிறகு) ஒளி பொருந்திய வில்லைக் கையில் ஏந்திய வீரர்களான இராமலக்குவர்கள் (இருவரும்); மலை தொடர்ந்த வெயில் வெங்கானம் - மலைகள் தொடர்ச்சியாக அமைந்த வெயிலால் வெப்பமடைந்த காட்டு (வழியில்); போயினர் - சென்றார்கள். ஆல் - அசை. 32 கலி விருத்தம் | 3573. | ஆசை சுமந்த நெடுங் கரி அன்னார் பாசிலை துன்று வனம் பல பின்னா, காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார்; யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார். |
ஆசை சுமந்த நெடுங்கரி அன்னார் - திசைகளைத் தாங்குகிற பெரிய திசை யானைகளை ஒத்தவர்களாகிய இராமலக்குவர்; பாசிலை துன்று வனம் பல பின்னா - பசிய இலைகள் நெருங்கிய காடுகள் பல பின்னாக (நடந்து சென்று); காசு அறு குன்றினோடு - குற்றம் இல்லாத மலைகளையும்; ஆறு கடந்தார் - ஆறுகளையும் கடந்தவர்களாகி; ஒன்பதொடு ஒன்பது யோசனை சென்றார் - பதினெட்டு யோசனை (தூரம்) சென்றார்கள். இராமலக்குவர் நடந்து சென்று பதினெட்டு யோசனை தூரம்கடந்தனர் என்க. ஆசை - திசை. துன்றுதல் - நெருங்குதல்; காசு - குற்றம்.அன்னார்- குறிப்பு வினையாலணையும் பெயர். பாசிலை - பண்புத்தொகை. கடந்தார் - முற்றெச்சம். 33 | 3574. | மண்படி செய்த தவத்தினில் வந்த கள் படி கோதையை நாடினர், காணார், | |