| | விரைந்து எதிர் வந்தனள், தீயினும் வெய்யாள்!. |
தீயினும் வெய்யாள் - தீயினைக் காட்டிலும் கொடியவள் ஆகிய அயோமுகி; இரந்தனென் எய்திய போது - (நான் இவனை) வேண்டி நெருங்கும் போது; இசையாது நனிகரந்தனனேல் - (என் விருப்பத்துக்கு) இசையாமல் முழுதும் மறுத்து விடுவானாகில்; கொண்டு கடந்து - (அவனை) எடுத்துக் கொண்டு கடந்து சென்று; என் முரஞ்சினில் மேவி - எனது குகைக்குக் கொண்டு சென்று; முயங்குவென் என்று - (அவனை) வலியத் தழுவுவேன் என்று சொல்லி; எதிர் விரைந்து வந்தனள் - (இலக்குவனுக்கு) எதிராக விரைந்து வந்தாள். என் ஆசைக்கு இணங்கா விட்டால் நான் அவனை வலியத் தூக்கிச் சென்று என் குகையில் வைத்து வலியத் தழுவுவேன்' என்று அயோமுகி எண்ணினாள். முரஞ்சு - பாறை, இங்கு மலை முழைஞ்சாகிய பாறையைச் சுட்டியது. ஆகு பெயர். இரந்தனன் - முற்றெச்சம். 42 அயோமுகியின் தன்மை | 3583. | உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள்; ஒன்ற எயிற்றின் மலைக் குலம் மென்று இனிது உண்ணும் வயிற்றள்; வயக் கொடு மாசுணம் வீசு கயிற்றின் அசைத்த முலை, குழி கண்ணாள்; |
உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் - (தன்) பெருமூச்சில் நெருப்பை வெளிக் காலுபவளும்; எயிற்றின் - பற்களால்; ஒன்ற - ஒன்றாக; மலைக்குலம் - யானைக் கூட்டங்களை; மென்று இனிது உண்ணும் - கடித்து மென்று இனிமையாக உண்ணுகின்ற; வயிற்றள் - வயிற்றினை உடையவளும்; வயக்கொடு மாசுணம் வீசு கயிற்றின் - வலிமையான கொடிய பாம்புகள் ஆகிய நீண்ட கயிற்றினால்; அசைத்த முலை - சேர்த்துக் கட்டிய முலைகளையும்; குழிகண்ணாள் - குழி விழுந்த கண்களையும் உடையவளும் ........ (தொடர்ச்சி அடுத்த பாடலில்). அயோமுகியின் பெருமூச்சு, வயிறு, முலை, கண் ஆகியவை பற்றி இப்பாடலில் கூறப்பட்டன.. மலை - யானை. மாசுணம் - பெரும் பாம்பு. மலை - யானைக்கு உவமையாகு பெயர். மலைக்குலம் - இருபெயரொட்டுப் பண்புத் தொகை. வய - வலியென்னும் பொருள் தரும் உரிச் சொல். 43 |