பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 693

3586. தடி தடவ, பல தலை தழுவ, தாள்
நெடிது அடைய, குடர் கெழுமு நிணத்தாள்;
அடி தடவ, பட அரவம் இசைக்கும்
கடிதடம் உற்றவள்; உருமு கறிப்பாள்;

    தடி தடவ - அளவு கோலால் தடவி அளப்பதற்குரிய; தலை பல
தழுவ -
(அந்த) இடத்தைப் போன்ற பல இடங்களைத் (தன்) ஓரடியில்
அளக்கும்படி; தாள் நெடிது அடைய - (தன்) பாதங்கள் நீண்ட தூரம்;
அடி தடவ - அடி வைத்துச் செல்ல; குடர் கெழுமு நிணத்தாள் -
(அதனால் தான் உண்டு செல்லுகிற) குடலொடு பொருந்திய கொழுப்பு
எங்கும் சிதற; பட அரவம் இசைக்கும் - படம் எடுத்த பாம்பின் படத்தை
ஒத்த; கடிதடம் உற்றவள் - அல்குல் பொருந்தியவளாகிய (அயோமுகி);
உருமு கறிப்பாள் - இடியை ஒத்து பற்களைக் கடிப்பவளாயினாள்....
(தொடர்ச்சி அடுத்த பாடலில்).

     நீண்ட அடிவைத்து அயோமுகி வரும் வேகத்தால் அவள் உண்டு
வந்த இறைச்சியும் கொழுப்பும் எங்கும் சிதறி விழுந்தன. பாம்பின் படத்தை
ஒத்த அல்குலை உடைய அவள் இடிபோல் பற்களைக் கடித்தாள் என்க.
தடி - அளவு கோல். இசைக்கும் - ஒக்கும். கடிதடம் - அரையிடம்
(அல்லது) அல்குல். உருமு - இடி. கறித்தல் - பற்களைக் கடித்தல். குடர் -
கடைப் போலி.                                               46

3587. இவை இறை ஒப்பன என்ன, விழிப்பாள்;
அவை குளிர, கடிது அழலும் எயிற்றாள்;
குவை குலையக் கடல் குமுற உரைப்பாள்;
நவை இல் புவித்திரு நாண நடப்பாள்.

    இவை - (அவளது) இக்கண்கள்; இறை ஒப்பன என்ன - சிவனின்
கண்களை ஒப்பன என்று சொல்லுமாறு; விழிப்பாள் - (சினத்துடன்)
விழித்துப் பார்ப்பவளும்; அவை குளிர - அக்கண்களில் இருந்து
வெளிப்பட்ட சின நெருப்புக் குளிர்ந்து விட்டது என்று சொல்லும்படியாக;
கடிது அழலும் எயிற்றாள் - மிகக் கொடுமையைக் காட்டும் பற்களை
உடையவளும்; குவைகுலையக் - மலைகளும் தன் நிலை கெட்டு அழியும்
படியும்; கடல் குமுற - கடல்கள் மோதிக் குமுறும் படியும்; உரைப்பாள் -
கடுமையாகப் பேசுபவளும்; நவை இல் புவித்திரு நாண நடப்பாள் -
குற்றம் இல்லாத பூமகளாகிய செல்வத் தேவி வெட்கம் அடையும்படி
நடப்பவளும்....... (தொடர்ச்சி அடுத்த பாடலில்).

     சிவபிரானின் கண்களில் தீ வெளிப்படுதல் போல் விழித்து, அந்
நெருப்பும் குளிர்ந்து விட்டது என்று எண்ணுமாறு பற்கடித்து
வெப்பமெழுப்பி, மலை குலைய, கடல் அதிர முழங்கி, பூமகள் நாண
அயோமுகி வந்தாள் என்க. இறை - சிவன், குவை - மலைக் கூட்டம்,
நவை - குற்றம். புவித்திரு - இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.      47