3593. | பின்னும் உரைப்பவள், 'பேர் எழில் வீரா! முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன் பொன்னின் மணித் தட மார்பு புணர்ந்து, என் இன் உயிரைக் கடிது ஈகுதி' என்றாள். |
பின்னும் உரைப்பவள் - மேலும் தொடர்ந்து கூறுபவளாகிய (அயோமுகி); 'பேர் எழில் வீரா - பேரழகுடைய வீரனே; முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு - இதற்கு முன்பு ஒருவரும் தொடாத முலையோடு (கன்னி என்றபடி); உன் பொன்னின் மணித்தட மார்பு புணர்ந்து - உன்னுடைய பொன் போன்ற அழகிய பெரிய மார்பைத் தழுவி; என் இன் உயிரைக் கடிது ஈகுதி - அதனால் எனது இனிமையான, உயிர் (போகாது இருக்க) விரைவாக அருள் ஈவாய்; என்றாள் - என்று கூறினாள். 'நான் பிறரோடு புணர்ந்தவளல்லள், உன்னை மட்டும் விரும்புபவள். எனவே என்னைப் புணர்ந்து என் இன்னுயிர் ஈவாய்' என்றாள். ஈகுதி - இழிந்தோள் கூற்றாக வந்தது. உரைப்பவள் - முற்றெச்சம், தொடா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். தடமார்பு - உரிச் சொல் தொடர். ஈகுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று. 53 3594. | ஆறிய சிந்தையள் அஃது உரைசெய்ய, சீறிய கோளரி கண்கள் சிவந்தான்; 'மாறு இல வார் கணை, இவ் உரை வாயின் கூறிடின், நின் உடல் கூறிடும்' என்றான். |
ஆறிய சிந்தையள் - (இலக்குவன் மீது கொண்ட காதலால்) கொடுமை குறைந்த மனம் உடையவளாகிய (அயோமுகி); அஃது உரை செய்ய - அந்தச் சொற்களைச் சொல்ல; சீறிய கோளரி - சினம் கொண்ட சிங்கம் போன்ற இலக்குவன்; கண்கள் சிவந்தான் - சினத்தால் கண்கள் சிவந்து; 'இவ்வுரை வாயின் கூறிடின் - இப்படிப்பட்ட சொற்களை (நீ மீண்டும்) வாயினால் கூறினால்; மாறு இலவார் கணை - (எனது) ஒப்பு இல்லாத நீண்ட அம்புகள்; நின் உடல் கூறிடும் - உனது உடலைத் துண்டு துண்டாக்கி விடும்'; என்றான் - என்று கூறினான். |