பக்கம் எண் :

698ஆரணிய காண்டம்

     நீ மீண்டும் இவ்வாறு கூறினால் என் அம்பு உன் உடலைக் கூறிடும்
என்றவாறு. கோளரி - உவமையாகு பெயர். கோளரி சிவந்தான் - திணை
வழுவமைதி. பாடலின் இறுதி வரியில் உள்ள சொல் நயம் காண்க.      54

3595. மற்று அவன் அவ் உரை
     செப்ப, மனத்தால்
செற்றிலள்; கைத் துணை
     சென்னியில் வைத்தாள்;
'கொற்றவ! நீ எனை வந்து
        
     உயிர் கொள்ளப்
பெற்றிடின், இன்று
     பிறந்தனென்' என்றாள்.

    அவன் மற்று அவ் உரை செப்ப - அந்த இலக்குவன் மாறுபாடாக
இந்தச் சொற்களைச் சொல்ல; மனத்தால் செற்றிலள் - மனத்தால் சினம்
கொள்ளாதவளாகிய (அயோமுகி); கைத் துணை சென்னியில் வைத்தாள் -
தன் இரண்டு கைகளையும் தலைமீது குவித்தவளாய்; 'கொற்றவ -
தலைவனே; நீ எனை வந்து - நீ என்னிடம் வந்து; உயிர் கொள்ளப்
பெற்றிடின் -
(நான்) உயிர் பெற்று வாழும்படி செய்யப் பெற்றால்; இன்று
பிறந்தனென் -
இன்று நான் (மீண்டும்) பிறந்ததன் பயனைப்
பெற்றவளாவேன்'; என்றாள் - என்று கூறினாள்.

     இலக்குவன் கூறியதைக் கேட்ட அயோமுகி சினம் கொள்ளாது
அவனைக் கை கூப்பி வணங்கி 'நீ எனக்கு அருள் செய்யின் நான் பிறந்த
பயனைப் பெற்றவள் ஆவேன்' என்றாள்.                          55

3596.வெங் கதம் இல்லவள்
     பின்னரும், 'மேலோய்!       
இங்கு நறும் புனல்
     நாடுதி என்னின்,
அங்கையினால் எனை,
     "அஞ்சலை" என்றால்,
கங்கையின் நீர் கொணர்வென்
     கடிது' என்றாள்.

    வெங்கதம் இல்லவள் - கொடிய சினம் இல்லாதவளாகிய
(அயோமுகி); பின்னரும் - பின்பும்; 'மேலோய் - உயர்ந்தவனே!; இங்கு
நறும் புனல் நாடுதி என்னின் -
இவ்விடத்தில் நல்ல நீரைத் தேடுகிறாய்
என்றால்; எனை - எனக்கு; அங்கையினால் - உன்னுடைய அழகான
கைகளினால்; "அஞ்சலை" என்றால் - அஞ்சாதே என்று அபயம்
அளித்தால்; கடிது - விரைவாக;