வைத்து; இவன் வெம்மை அகற்றிய பின்னை - இவனது சினத்தைத் தணித்த பின்பு; உடற்படுமால் - (இவன் என் எண்ணத்துக்கு) உடன்படுவான்; உடனே நன்மை உறும் - (அதற்குப் பின்பு) விரைவாக (இவனால்) எனக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கும்; இதுவே திடத்து நலன் - இவ்வாறு செய்வதுவே உறுதியாக நன்மை தரும்; என்று - என்று எண்ணி; அயல் சென்றாள் - (இலக்குவனது) அருகில் சென்றாள். இவனை என் குகைக்கு எடுத்துச் சென்று சினத்தைத் தணித்தால், இவன் எனக்கு உடன்படுவான். அதுவே உறுதியாகச் செய்யத் தக்கது என்று எண்ணிய அயோமுகி இலக்குவனுக்குப் பக்கத்தில் போனாள். முழை - குகை, வெம்மை - வெப்பம், ஈண்டுச் சினம். திடம் - உறுதி, எடுத்தனென் - முற்றெச்சம். ஆல் - அசை. 58 இலக்குவனை அயோமுகி தூக்கி்ச் செல்லல் 3599. | மோகனை என்பது முந்தி முயன்றாள்; மாக நெடுங் கிரி போலியை வவ்வா ஏகினள் - உம்பரின் இந்துவொடு ஏகும் மேகம் எனும்படி - நொய்தினின் வெய்யாள். |
வெய்யாள் - கொடியவளாகிய அயோமுகி; மோகனை என்பது - மோகத்தை உண்டாக்கும் மாயையை; முந்தி முயன்றாள் - முன்னால் முயன்று செய்து; மாக நெடுங்கிரி போலியை வவ்வா - விண்ணை அளாவிய பெரிய மலை போன்றவனாகிய இலக்குவனைத் தூக்கிக் கொண்டு; உம்பரின் - மேலே உள்ள வானத்தில்; இந்துவொடு ஏகும் மேகம் எனும்படி - நிலவுடன் சேர்ந்து செல்லுகிற மேகம் என்று சொல்லும் படியாக; நொய்தினின் - (மிக) விரைவாக; ஏகினள் - சென்றாள். அயோமுகி மோகனை என்ற மாய மந்திரத்தால் இலக்குவனை மயக்கி, அவனை எடுத்துக் கொண்டு, நிலவுடன் சேர்ந்து செல்லுகிற மேகம் போல வானத்தில் விரைந்து சென்றாள். மோகனை - மோகத்தை உண்டாக்கும் மாயை. மாகம் - வானம். இந்து - நிலவு. நொய்தினின் - எளிமையாக எனினுமாம். "நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்" (5) எனக் கம்பர் கூறியுள்ளதை எண்ணுக. இந்து - இலக்குவனுக்கும் மேகம் - அயோமுகிக்கும் உவமையாம். ஒளி அறத்துக்கும், கருமை பாவத்துக்கும் இங்கு வந்துள்ளமை காண்க. வவ்வா - செய்யா எனும் வாய்பாட்டு உடன் பாட்டு வினையெச்சம். 59 3600. | மந்தரம் வேலையில் வந்ததும், வானத்து இந்திரன் ஊர் பிடி என்னலும், ஆனாள்; |
|