பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 701

வெந் திறல் வேல் கொடு சூர் அடும் வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள்.

     மந்தரம் வேலையில் வந்ததும் - (இலக்குவனைத் தூக்கிச் சென்ற
அயோமுகி) மந்தரமலை கடலில் பொருந்தியது போலவும்; வானத்து
இந்திரன் ஊர்பிடி -
தேவர் உலகத்தில் இந்திரன் ஏறிச் செலுத்தும்
(ஐராவதம் என்ற ஆண் யானையின் துணையாகிய) அப்பிரமு என்ற பெண்
யானை; என்னலும் ஆனாள் - என்று உவமை கூறத்தக்கவளாய்
விளங்கினாள்; வெந்திறல் வேல் கொடு சூர் அடும் - (அதற்கு மேல்
தன்) வலிமை பொருந்திய வேலைக் கொண்டு சூரபதுமனைக் கொன்ற; வீரச்
சுந்தரன் ஊர்தரு தோகையும் -
வீர அழகனாகிய முருகக் கடவுள் ஏறிச்
செலுத்துகிற மயிலையும்; ஒத்தாள் - ஒத்து விளங்கினாள்.

     இலக்குவனை அயோமுகி தூக்கிச் சென்ற காட்சியை இப்பாடலில்
மூன்று உவமைகள் கொண்டு விளக்கினார் (1) மந்தரமலை - இலக்குவன்,
கடல் - மந்தர மலையைத் தாங்கிய கடல் அயோமுகி. இஃது இல் பொருள்
உவமை. (2) இந்திரன்; இலக்குவன், அவன் ஊர்பிடி - அப்பிரமு:
அயோமுகி. அயோமுகி பெண் என்பதால் இந்திரன் ஊரும் ஐராவதம் என்ற
ஆண் யானையைக் கூறாது அதன் துணையாகிய பெண் யானையைக்
கூறினார். (3) முருகன் : இலக்குவன். முருகனைத் தாங்கும் தோகை;
அயோமுகி. இங்குப் பெண் மயில் கூறாது தோகையுடைய ஆண் மயிலைக்
கூறியது, முருகனைச்

சுமக்கும் மயிலைக் கருதியதால் என்க. இம்மூன்று உவமைக்கும்,
"தாங்குதல்" என்பது பொதுத் தன்மையாதலையும் அறிக. வேலை -
கடல், சூர் - சூரபதுமன், சுந்தரன் - முருகன்.                       60

3601. ஆங்கு அவள் மார்பொடு
     கையின் அடங்கி,
பூங் கழல் வார் சிலை
     மீளி பொலிந்தான்;
வீங்கிய வெஞ்சின வீழ்
     மத வெம் போர்
ஓங்கல் உரிக்குள்
உருத்திரன் ஒத்தான்.

    ஆங்கு - அந்த நிலையில்; அவள் மார்பொடு கையின்
அடங்கி -
அவளது மார்பின் கண்ணும் கையின் கண்ணும் அடங்கி;
பூங்கழல் வார் சிலை மீளி - அழகிய வீரக்கழலை அணிந்த நீண்ட
வில்லை ஏந்திய வீரனாகிய (இலக்குவன்); பொலிந்தான் - அழகு
பெற விளங்கினான்; வீங்கிய வெஞ்சின - மிகக் கொடிய
சினத்தினையும்; வீழ் மத - வடிகின்ற மதத்தினையும்; வெம்போர் -
கொடிய போரினையும் செய்கிற; ஓங்கல் - யானையினது; உரிக்குள் -
உரித்த தோலுக்குள் இருந்து காட்சியளிக்கும்; உருத்திரன் ஒத்தான் -
சிவ பிரானை ஒத்து விளங்கினான்.