3605. | 'அம் சொல் கிளி அன்ன அணங்கினை முன் வஞ்சித்த இராவணன் வவ்வினனோ? நஞ்சின் கொடியான் நடலைத் தொழிலால், துஞ்சுற்றனனோ, விதியின் துணிவால்? |
அம் சொல் கிளி அன்ன அணங்கினை - அழகு மொழி பேசும் கிளி போன்ற அழகிய சீதையை; முன் வஞ்சித்த இராவணன் வவ்வினனோ - முன்னாளில் வஞ்சனையால் கவர்ந்து சென்ற இராவணன் (இப்போது இவனையும்) கவர்ந்து சென்றனனோ?; நஞ்சின் கொடியான் நடலைத் தொழிலால் - நஞ்சினைக் காட்டிலும் கொடியவனான இராவணனது வஞ்சனைத் தொழிலால்; விதியின் துணிவால் - ஊழ் வினையின் வலிமையால்; துஞ்சுற்றனனோ? - இறந்துபட்டானோ? வஞ்சனையால் கவரும் இராவணன் கொடுமை தொடர்கிறதோ என்பது இராமன் கொண்ட ஐயத் தடுமாற்றம். விதிக்கும் விதியாகும் விற்றொழில் வல்லவனாகிய இலக்குவனையும் விதி வென்றதால் இறந்திருப்பானோ என்ற அளவுக்கும் பெருமான் தடுமாறுகிறான். அணங்கு - பெண்களிற் சிறந்தவள். நடலை - வஞ்சனை. துஞ்சுற்றனன் - தகுதி வழக்கில் மங்கல வழக்கு என்க. தொழிலால், துணிவால் - ஆல் கருவிப் பொருளில் வந்தது. 65 3606. | 'வரி விற் கை என் ஆர் உயிர் வந்திலனால்; "தரு சொல் கருதேன்; ஒரு தையலை யான் பிரிவுற்றனென்" என்பது ஒர் பீழை பெருத்து எரிவித்திட, ஆவி இழந்தனனோ? |
வரிவிற்கை என் ஆர் உயிர் வந்திலனால் - கட்டமைந்த வில்லைக் கையில் ஏந்திய என் அருமையான உயிர் போன்ற தம்பி வரவில்லை; தருசொல் கருதேன் - (தான் எனக்குச்) சொன்ன சொற்களை எண்ணிக் கருதாமல்; யான் ஒரு தையலை - நான் ஒப்பற்ற பெண்ணாகிய சீதையை; பிரிவுற்றனென் - பிரியப் பெற்றேன்; என்பது ஒர் பீழை - என்ற ஒப்பற்ற பெருந்துன்பம்; பெருத்து எரிவித்திட - மிகுந்து தன்னை வாட்டி வருத்தியதால்; ஆவி இழந்தனனோ - உயிரை விட்டு விட்டானோ. |