3. அகத்தியப் படலம் அகத்திய முனிவரின் தவச் சாலைக்கு இராமன் சீதை இலக்குவரோடு எழுந்தருளியதைக் கூறும்படலம். அகத்தியன் என்பதற்கு மலையை அடக்கியவன் என்ற பொருளுரைப்பர். சரபங்க முனிவர்அருநெறி அடைந்தபின் தம்பியொடும் மனைவியொடும் வாலகில்லியர் தன்னைக் கண்டு மகிழ,அகத்தியரின் தவச்சாலையை அடைந்து வில், அம்பு, வாள், தண்டு முதலியவற்றை அம்முனிவரிடமிருந்துபெறும் வரலாறு. இராமன் முதலியோர் சரபங்கர் குடிலிலிருந்து போதல் கலிவிருத்தம் 2631. | அனையவன் இறுதியின் அமைவுநோக்கலின், இனியவர், இன்னலின் இரங்கும் நெஞ்சினர், குனி வரு திண் சிலைக் குமரர், கொம்பொடும், புனிதனது உறையுள்நின்று அரிதின் போயினார். |
இனியவர் குனிவரு திண் சிலைக்குமரர் - எல்லோர்க்கும் இனிமையை அளிப்பவர்களும் வளைந்த வலிய வில்லையுடையவர்களுமான இராமலக்குவர்;அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின் - அந்தச் சரபங்க முனிவரின் முடிவின் நிலையைப்பார்த்தமையால்; இன்னலின் இரங்கும் நெஞ்சினர் - துன்பத்தால் வருந்தியமனமுடையவர்களாய்; கொம்பொடும் - பூங்கொம்பு போன்ற சீதையுடன்; புனிதனது உறையுள் நின்று அரிதின் போயினார் - தூயவராம் அம்முனிவரின் தவச்சாலையிலிருந்து துன்பத்தோடுநடந்து சென்றனர். சரபங்கர் தீயில் புக்கு நல்லுலகம் அடைந்ததைப் பார்த்து இராமன் முதலியோர்வியப்பெய்தினர் என்பர் வால்மீகி. இங்குக் கம்பர் அந்நிலையைத் துன்பச் சூழலாகக்காட்டுகிறார். தீப்புகு காட்சி, யாவர் மனத்தையும் கலங்கச் செய்வதாம். உறையுள் -இருப்பிடம், அரிதிற் போயினார் - அம்முனிவரின் பிரிவால் வருந்திச் சென்றனர் எனலுமாம்.கொம்பு - உவமையாகுபெயர். 1 |