பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 711

     என வருவதைக் காண்க. காவலில் நின்ற இமையாதவன் -
இதனைக் கங்கை காண் படலத்தில் குகன் பரதனிடம் கூறிய

    

     "அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
                                                  (2344)

     என்ற பாடலால் அறிக. இலக்குவனுக்கு 'உறங்கா வில்லி' என்ற
பெயர் உண்டு என்பதை நினைவு கொள்க.                       76

இறக்க எண்ணிய இராமன் அரக்கியின் அலறல் கேட்டல்

3617.'அறப் பால் உளதேல், அவன்
     முன்னவன் ஆய்ப்
பிறப்பான் உறில், வந்து
     பிறக்க' எனா,
மறப்பால் வடி வாள் கொடு,
     மன் உயிரைத்
துறப்பான் உறுகின்ற
     தொடர்ச்சியின் வாய்,

    அறப்பால் உளதேல் - நல்வினைப் பகுதி உண்டானால்;
அவன் முன்னவன் ஆய்ப்பிறப்பான் உறில் - (அந்த இலக்குவன்
எனக்குத்) தமையன் ஆக வந்து பிறக்கக் கூடுமானால்; வந்து பிறக்க
எனா -
வந்து பிறக்கட்டும் என்று கூறிக் கொண்டு; மறப்பால்
வடிவாள் கொடு -
வீரம் பொருந்திய கூர்மையான வாளைக்
கொண்டு; மன் உயிரை - தன் நிலை பெற்ற உயிரை; துறப்பான்
உறுகின்ற -
நீக்க முயல்கின்ற; தொடர்ச்சியின் வாய் - நேரத்தின்
கண்ணே.... (அடுத்த பாடலில் முடியும்).

     நல்லூழ் அமையுமானால் அடுத்த பிறவியில் அவன் எனக்குத்
தமையனாகப் பிறக்கிற பேறு வாய்க்கட்டும் என்று சொல்லி, இராமன்
வாளால் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளப் போகும் நிலையினை
இப்பாடல் சுட்டிற்று. அறப்பால் - அறத்தின் பயனாகிய நல்லூழ்.
அவன் எனக்குப் பாகவதனாயிருந்து செய்த கைங்கர்யங்களை நான்
அவனுக்குச் செய்ய நல் வினைப் பயனால் அவன் எனக்கு அடுத்த
பிறவியில் தமையன் ஆகப் பிறக்கட்டும் என்றவாறு.                  77

3618.பேர்ந்தான், நெடு
     மாயையினில் பிரியா;
ஈர்ந்தான், அவள் நாசி
     பிடித்து, இளையோன்;
சோர்ந்தாள் இடு பூசல்
     செவித் துளையில்
சேர்ந்து ஆர்தலுமே,
     திருமால் தெருளா,